
Cinema News
மனதை உலுக்கும்!…தூங்கவிடாமல் செய்யும்!…ஒரு சிறந்த சினிமா ‘ஜெய்பீம்’…
பத்திரிக்கையாளர் ஞானவேல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை சூர்யா நடித்ததோடு தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார்.
விழுப்புரம் அருகே வாழும் இருளர் சமூகத்தினர் சந்தித்த ஒரு பிரச்சனையையும், அவர்களுக்காக வழக்கறிஞர் சந்துரு (பின்னாளில் நீதிபதி சந்துரு) என்பவர் எப்படி போராடி நியாயம் பெற்று தந்தார் என்கிற உண்மை கதையை திரைக்கதை ஆக்கியுள்ளனர். வழக்கறிஞர் சந்துரு வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். இப்படம் நேற்று இரவு அமேசான் பிரைமில் வெளியானது.
அமேசானில் வருவதற்கு முன்பே இப்படம் செய்தியாளர்களுக்கும், சினிமா விமர்சகர்களுக்கும், ஊடகவியலார்க்கும் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இப்படத்தை பார்த்த பலரும் இப்படம் சிறப்பாக இருப்பதாக பாராட்டியிருந்தனர். திரைப்படம் எடுத்ததோடு மட்டுமில்லாமல் பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதியினை தமிழக முதல்வரிடம் சூர்யா அளித்துள்ளார்.
இப்படம் கடந்த 10 வருடங்களில் வெளிவந்த சிறந்த படங்களில் முக்கியமான படம் என பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமரசம் செய்து கொள்ளாமல் அந்த கதையை ரத்தமும், சதையுமாக இப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர்.
எளியோர் மீது காவல்துறை எவ்வளவு வன்மம் காட்டுகிறது என்பதையும், அந்த பிரச்சனை பூதாகரம் ஆனதும் அதை மறைக்க அரசு தரப்பில் என்னென்ன முயற்சிகள் செய்வார்கள் என்பதையும் தோலுரித்து காட்டுகிறது ஜெய்பீம்.
இந்த கதையை படமாக்க வேண்டும் என விரும்பிய தயாரிப்பாளர் சூர்யா, அதில் தானே நடிக்க வேண்டும் என விரும்பிய சூர்யா என இருவரையுமே பாராட்டியாக வேண்டும். சமூகத்தின் மீது அக்கறை உள்ள ஒரு நடிகனால் மட்டுமே இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடிக்க முடியும். இப்படத்தில் சூர்யாவுக்கு பாடல்களோ, ஜோடியோ, சண்டை காட்சிகளோ இல்லை. ஆனால், ஹீரோவாக மனதில் நிறைகிறார். உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுபவன்தானே ஹீரோ. அதை சூர்யா சிறப்பாக செய்துள்ளார்.
இந்த வழக்கை கையாண்ட வழக்கறிஞர் சந்துருவை நேரில் சந்தித்து இந்த வழக்கு பற்றிய முழு தகவல்களையும் பெற்று இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளனர். எனவே, இப்படம் உண்மைக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது. அதுதான் இப்படத்தின் பலமே.
இந்திய சினிமாவில் ஜெய்பீம் ஒரு சிறந்த படம் எனவும், சூர்யாவின் மீது வரும் மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதாக நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர். வன்முறையை காரணம் காட்டி A சான்றிதழ் வழங்கியுள்ளனர் தணிக்கை அதிகாரிகள். ரவுடி செய்தால்தானே வன்முறை.. போலீசார் கைதியை அடிப்பது எப்படி வன்முறையில் வரும்? இதுவே ஜெய்பீம் படத்துக்கு எதிரான அநீதிதான் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
தியேட்டரில் வெளியாகியிருந்தால்தானே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் அனுமதி!.. இப்படம் ஓடிடியில் வெளியாகி அனைத்து தரப்பையும் பார்க்க வைத்துள்ளது.
ஜெய் பீம் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்..