கோப்ரா படம் எப்படி இருக்கு?!..நெட்டிசன்கள் சொல்வது என்ன?...
டீமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் கோப்ரா. இப்படம் கடந்த 2 வருடங்களாக உருவானது.
இப்படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடித்துள்ளார். பல்வேறு எதிர்பார்ப்புகளிடையே இப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது.
இந்நிலையில், இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விக்ரமின் நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும், விக்ரம் தான் ஒரு திறமையான நடிகர் என மீண்டும் நிரூபித்திருப்பதாகவும், அவர் ஒருவரே படத்தை தூக்கி நிறுத்துவதாகவும், ஏ.ஆர். ரஹ்மான் இசை மற்றும் பிண்ணணி இசை சிறப்பாக இருப்பதாகவும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், பல காட்சிகள் விறுவிறுப்பாக இருப்பதாகவும், சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க வைப்பதாகவும், படத்தின் இடைவேளை காட்சி திருப்பம் அட்டகாசமாக இருப்பதாகவும் பலரும் டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரம், படத்தின் 3 மணி நேர நீளம் கொஞ்சம் சோதிப்பதாகவும், விக்ரமின் நடிப்பு மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையை தாண்டி படத்தில் ரசிப்பதற்கு ஒன்றுமில்லை எனவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். சிலரோ, திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் சிறப்பான படமாக கோப்ரா வந்திருக்கும் எனவும் விமர்சகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
எனவே, விரைவில் இப்படத்தின் நீளம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.