எல்லாரும் பார்த்து கத்துக்குங்கப்பா!... வலிமை வெற்றி பெற அஜித் ரசிகர்கள் செய்த காரியம்...
பொதுவாக ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிம்பு போன்ற நடிகர்களின் பட அறிவிப்பு, ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் மற்றும் பட ரிலீஸ் அறிவிப்பு என எது வெளியானாலும் அவர்களின் ரசிகர்களுக்கு அது கொண்டாட்டம்தான். பேனர் கட்டுவது, போஸ்டர் அடிப்பது, பேனருக்கு பால் ஊற்றுவது என அவர்களின் அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
சில சமயம் ஆர்வமிகுதியில், ஆர்வக்கோளாறில் எல்லை மீறியும் அவர்கள் நடந்து கொள்வார்கள். கன்னட நடிகர் சுதீப்பின் பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் கொண்டாடிய போது ஒரு எருமை மாட்டை வெட்டி அந்த ரத்தத்தை சுதீப்பின் பேனர் மீது தெளித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கண்டனத்திற்கு உள்ளாகியது.
அதேபோல், ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான போது அதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர்.அப்போது, அண்ணாத்த பட கட் அவுட்டின் மீது ஆட்டை வெட்டி ரத்தாபிஷேகம் செய்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு ரஜினி தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அஜித் ரசிகர்கள் சிலர் வேறு மாதிரி யோசித்து செய்து வரும் காரியம் சமூகவலைத்தளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.
அஜித்தின் ‘வலிமை’ படம் வெற்றி பெற வேண்டி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அவரது ரசிகர்கள் 10 ஆயிரம் பனை விதைகளை குளக்கரையில் நடவு செய்துள்ளனர்.
இதை பலரையும் பாராட்டி வருகின்றனர். இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமான பனை விதைகளை விதைத்த ‘பனைமரக் காதலர்கள்’ என்ற அமைப்புடன் கைகோர்த்து இந்த செயலை அஜித் ரசிகர்கள் செய்துள்ளனர். இதை பலரும் வரவேற்றுள்ளனர்.