abishan (1)
abishan (1)

எத்தனையோ புதுமுக நடிகர்கள் வந்தாலும் வசூலில் தன்னுடைய ஆளுமையை காட்டுவது ரஜினி, விஜய், அஜித் போன்றவர்கள்தான். ரஜினியை பொறுத்தவரைக்கும் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனாலும் கிட்டத்தட்ட 40 வருடங்களாக இந்த சினிமா துறையில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார். அவருக்கு அடுத்த படியாக வந்த விஜய் இப்போது ரஜினிக்கு இணையான புகழோடும் பேருடன் இருந்து வருகிறார்.

சொல்லப்போனால் வசூல் சக்கரவர்த்திகளாக இப்போது தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் ரஜினி மற்றும் விஜய். இவர்களுக்கு அடுத்த இடத்தில்தான் அஜித் இருக்கிறார். இதற்கிடையில் விஜய் இப்போது அரசியலில் இறங்கியிருப்பதால் அவருடைய இடத்தை யார் தக்க வைப்பார் என்ற ஒரு போட்டியே இப்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வசூலில் மன்னர்களாக இருந்தாலும் அவர்கள் நடிக்கும் படங்கள் சமீபகாலமாக சுமாரான வரவேற்பையே பெற்று வருகிறது. மாஸ், ஆக்‌ஷன் இதை வைத்தே தங்களுடைய படங்களின் வசூலை அதிகரித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும் அந்தப் படங்கள் தான் இப்போது ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. அதனால் புதுமுக நடிகர்கள் அப்படிப்பட்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அப்படி கோலிவுட்டில் களமிறங்கிய புதுமுக நடிகர்கள் யாரெல்லாம் என்பதை பற்றித்தான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம். சிறை மற்றும் வித் லவ் படங்களின் வெற்றியால் அதில் நடித்த எல்.கே. அக்‌ஷய்குமாரையும் வித் லவ் படத்தின் ஹீரோவான அபிஷன் ஜீவிந்தையும் பெரியளவில் கொண்டாடி வருகின்றனர். எப்படி லவ் டுடே படத்தின் மூலம் பிரதீப் ஒரு ஹீரோவாக மக்கள் மனதில் நின்றாரோ அதே மாதிரியான ஒரு இடத்தை அபிஷனும் தக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக யூத் என்ற படத்தின் மூலம் கென் கருணாஸ் ஹீரோவாக களமிறங்குகிறார். இந்தப் படம் நிச்சயமாக மக்களை நல்ல முறையில் சென்றடையும் என கென் கருணாஸ் நம்பிக்கை வைத்திருக்கிறார். அது மட்டும் ஹிட்டானால் அடுத்து கென் கருணாஸும் அடுத்தடுத்த படங்களில் ஆதிக்கம் செலுத்துவார்.

டிசி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ். இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அனிருத் இசையில் தயாராகும் இந்தப் படம் லோகேஷை ஹீரோ அந்தஸ்தில் உட்கார வைக்குமா என்பதை பார்க்க வேண்டும். அடுத்து விஜே சித்து இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடிக்கும் டயங்கரம் படமும் காத்திருக்கிறது. இந்தப் படம் எப்படியான ஒரு வரவேற்பை அவருக்கு கொடுக்கும் என்பதை பார்க்க வேண்டும். இவர்கள் வரிசையில் எலன் , அஸ்வத் மாரிமுத்துவும் ஹீரோவாக களமிறங்க காத்திருக்கிறார்கள்.