பொய் சொன்னா படத்துல இருந்து தூக்கிருவாங்கடா… - நிழல்கள் ரவிக்கு ரகுவரன் கொடுத்த அட்வைஸ்!..

1980 ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் திரைப்படம் இரண்டு பிரபலங்களுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதில் ஒருவர் வைரமுத்து மற்றொருவர் நிழல்கள் ரவி. இருவருமே அந்த ஒரு படத்தில்தான் அறிமுகமானார்கள்.
மற்ற நடிகர்களை போலவே நிழல்கள் ரவியும் மிகவும் கஷ்டப்பட்டே சினிமாவிற்கு வந்தார். அப்போது சினிமாவில் வாய்ப்பு தேடும் நடிகர்கள் எல்லாம் ஒவ்வொரு ஸ்டுடியோவாக ஏறி இறங்கி வாய்ப்பு தேடிக்கொண்டே இருப்பது வழக்கம்.

அப்படி நிழல்கள் ரவி சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த சமகாலத்தில் அதே போல வாய்ப்பு தேடி கொண்டிருந்த இன்னொரு நடிகர்தான் ரகுவரன். சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்த நிழல்கள் ரவியும், ரகுவரனும் நண்பர்களாக இருந்துள்ளனர்.
இருவருக்குமிடையே நட்பு:
அவர்களது நட்பை குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார் நிழல்கள் ரவி. நிழல்கள் ரவி கல்லூரி படிக்கும் சமயங்களில் ஹாலிவுட் திரைப்படங்கள் போடும் தியேட்டருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அங்கு ரகுவரன் பணிப்புரிந்து வந்தார்.
அப்போதே அவர்களுக்குள் பழக்கம். அதற்கு பிறகு வெகுநாள் கழித்து இருவரும் ஒரு டீக்கடையில் சந்தித்தப்போதுதான் இருவரும் சினிமாவில் முயற்சிப்பது குறித்து பகிர்ந்துள்ளனர். அப்போது ரகுவரன் ஏழாவது மனிதன் என்கிற திரைப்படத்திலும், நிழல்கள் ரவி , நிழல்கள் திரைப்படத்திலும் நடித்து வந்தனர்.

அதன் பிறகு இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். அப்போது மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் ரகுவரன், நிழல்கள் ரவி இருவருக்குமே வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நிழல்கள் ரவி கதாபாத்திரத்திற்கு தண்ணீர் தொடர்பான காட்சிகள் இருப்பதால் நீச்சலடிக்க தெரிந்தவர்தான் அந்த கதாபாத்திரத்திற்கு வேண்டும் என கூறிவிட்டனர்.
ஆனால் நிழல்கள் ரவிக்கு நீச்சல் அடிக்கவே தெரியாது. இருந்தாலும் தனக்கு நீச்சலடிக்க தெரியும் என கூறியுள்ளார். இதை அறிந்த ரகுவரன் “டேய் உண்மை தெரிஞ்சா உன்ன படத்தில் இருந்தே தூக்கிடுவாங்கடா” என அறிவுரை கூறியுள்ளார். அந்த அளவிற்கு தன்னுடைய நலனில் ஆர்வம் கொண்டவர் ரகுவரன் என பேட்டியில் கூறியுள்ளார் நிழல்கள் ரவி.