ரசிகர்களாலும் திரையுலகினராலும் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று தனது 75 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகத்திலிருந்தும் அரசியல் வட்டாரத்திலிருந்தும் பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். ரஜினி தொடர்பான பல வீடியோக்களும் உருவாக்கப்பட்டு வைரலாகி வருகிறது.
இது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் ரஜினியின் பிறந்த நாளான இன்று அவர் அடுத்து நடிக்கவுள்ள புது படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ரஜினியின் 173 வது படத்திலிருந்து இருந்து சுந்தர்.சி விலகிய நிலையில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்த படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியானது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
அதேபோல் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என பலரும் எதிர்பார்த்தார்கள் ஆனால், அந்த படத்தின் அறிவிப்பும் இன்று வெளியாகவில்லை. இயக்குனர் முடிவாகவில்லை என்பதால் வெளியிடவில்லையா என்பது தெரியவில்லை. ஆனால் ரஜினியின் அடுத்த படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கப் போகிறார் என்பது உறுதியான பின்னரும் ஏன் அறிவிப்பு வெளியாகவில்லை என்பது தெரியவில்லை.
இதையெல்லாம் விட ரஜினி தற்போது நடித்து வரும் ஜெயிலர் 2 படம் தொடர்பான புதிய போஸ்டர், கிளிம்ப்ஸ் வீடியோ என எதுவுமே வெளியாகவில்லை. இது ரஜினி ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறது. அதேநேரம், படையப்பா ரீ-ரிலீஸ் அவர்களை கொஞ்சம் உற்சாகப்படுத்தியிருக்கிறது.
