Cinema History
என்.எஸ்.கே சொன்னதை கேட்டு அரண்டு போன ஜெமினி ஸ்டூடியோ… கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?..
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், உதவி என்று யார் வந்தாலும் அள்ளித்தரும் வள்ளலாகவே திகழ்ந்தார். தன் மனதில் பட்டதை மிகவும் தைரியமாக வெளிப்படுத்தக்கூடிய நடிகராகவும் இருந்தார். இந்த நிலையில் ஜெமினி ஸ்டூடியோவில் பல ஆண்டுகளாக இருந்த வழக்கம் ஒன்று, என்.எஸ்.கிருஷ்ணன் சொன்ன வார்த்தையால் மாறி இருக்கிறது. அந்த சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
ஜெமினி ஸ்டூடியோவிற்கு காரில் வரும் நடிகர்கள் யாரும் காரோடு உள்ளே நுழைய முடியாதாம். ஸ்டூடியோவின் நுழைவு வாயிலில் சங்கிலி போட்டு வைத்திருப்பார்களாம். ஆதலால் காரை வெளியிலேயே நிறுத்திவிட்டு உள்ளே நடந்துதான் செல்லவேண்டுமாம்.
அப்போது என்.எஸ்.கிருஷ்ணன் “மங்கம்மா சபதம்” என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெமினி ஸ்டூடியோவுக்கு காரில் வந்தாராம். அவரை தடுத்து நிறுத்திய காவலாளி, வெளியே காரை நிப்பாட்டிவிட்டு நடந்து போகும்படி கூறினாராம். “ஏன்?” என்று என்.எஸ்.கிருஷ்ணன் கேட்க, அதற்கு அந்த காவலாளி “இது முதலாளியோட உத்தரவு” என்று கூறினாராம்.
உடனே கலைவாணர், “அப்படியா, அப்படின்னா உங்க முதலாளிக்கிட்ட போய் சொல்லுங்க, இந்த சங்கிலியை எடுத்தப்பிறகுதான் நான் அவரது படத்தில் நடிப்பேன் என்று” என கூறிவிட்டு காரில் ஏறி வீட்டிற்கு போய்விட்டாராம். இந்த தகவலை எஸ்.எஸ்.வாசன் கேள்விபட்டவுடன், அன்றிலிருந்து சங்கிலியை நிரந்தரமாகவே நீக்கிவிட்டாராம். இவ்வாறு பல ஆண்டுகளாக இருந்த வழக்கத்தையே தனது பேச்சால் மாற்றியிருக்கிறார் என்.எஸ்.கிருஷ்ணன்.