கடனில் சிக்கி மூழ்கித் தவித்த கண்ணாம்பாள்...கடைசி வரை காப்பாற்றிய புரட்சித்தலைவர்
கூர்மையான நாசி...மேலேறிய நெற்றி...ஆந்திரப் பெண்களுக்கே உரிய உயரம்..கம்பீரமான குரல்...கனிவான கண்கள்...பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்றவாறு அவ்வப்போது கண்களை உருட்டி விழிக்கும் தன்மை...என கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக் கொள்ளும் ஆளுமைத் திறன் என இவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
குறிப்புகளை வைத்தே இவர் யார் என கண்டுபிடித்தீர்களே..ஆம். அவர் தான் நடிகை கண்ணாம்பாள். தமிழ்த்திரை உலகில் அம்மா வேடம் என்றாலே இவர் தான் நம் நினைவுக்கு வரும். அந்த அளவு கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர் இவர். செல்வச்செழிப்பில் வளர்ந்து வாழ்ந்து வந்த இவரது வாழ்க்கையிலும் நெஞ்சை உருக்கும் சோக சம்பவம் நடந்துள்ளது. அதைப் பற்றி பார்க்கலாம்...!
தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட போதும் தமிழில் நீண்ட வசனங்களையும் சர்வ சாதாரணமாகப் பேசி அசத்துவார் கண்ணாம்பாள்.
கண்ணகி கதாபாத்திரத்தை உதாரணமாகச் சொல்லலாம். மனோகரா படத்தில் சிவாஜிக்கு இணையாக நீண்ட வசனங்களைப் பேசி கலக்கியிருப்பார். அந்தக்காலத்தில் கதாநாயகர்களை விட அதிகமாக சம்பளம் வாங்கியவர் இவர் தானாம்.
கண்ணாம்பாள் நடித்த தேவர் பிலிம்ஸ் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாயின. தாயைக் காத்த தனயன், தாய் சொல்லைத் தட்டாதே, நீதிக்குப் பின் பாசம் என புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் இணைந்து நடித்த கண்ணாம்பாவின் படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றி பெற்றன.
இதனால் எம்ஜிஆருக்கு பேரையும் புகழையும் ஈட்டித்தந்தன. கண்ணாம்பா தங்க நகைகளை விரும்பி அணிவாராம். ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நகை என அணிந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தார். அவரது வாழ்விலும் மிகப்பெரிய சோதனையான காலம் வந்தது.
கண்ணாம்பா வாழ்க்கையில் ஏதாவது ஒரு விதத்தில் ஜெயித்து விட மாட்டோமா என்ற எண்ணத்தில் தயாரிப்பாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். இந்த முயற்சி தான் கண்ணாம்பாவின் வாழ்க்கையையே அதளபாதாளத்திற்குக் கொண்டு சென்றது.
இவர் ராஜராஜேஸ்வரி அம்மனின் தீவிர பக்தை. அதனால் தான் நடத்தி வந்த ராஜராஜேஸ்வரி என்ற நாடகக்கம்பெனியின் பெயரை ராஜராஜேஸ்வரி பிலிம்ஸ் என்ற சினிமா கம்பெனியாக மாற்றி சில படங்களையும் எடுத்தார். ஹரிச்சந்திரா, நாக பஞ்சமி, நவஜீவனம், ஏழை உழவன் என 25 படங்களைத் தயாரித்தார்.
இதில் பெரும்பாலான படங்கள் தொடர் தோல்வி அடையவே பொருளாதார சிக்கலில் தவித்து கடனாளியானார். இருந்தாலும் முயற்சியைக் கைவிடாத கண்ணாம்பா எம்ஜிஆரிடம் தாலி பாக்கியம் என்ற படத்தில் நடித்துத் தருமாறு உதவி கேட்டார்.
1966ம் ஆண்டு எம்ஜிஆர், சரோஜா தேவி, எம்என்.ராஜம், எஸ்.வி.சுப்பையா, எம்என்.நம்பியார் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படத்தை கண்ணாம்பாவின் கணவர் நாகபூஷணம் இயக்கினார்.
ஒருநாள் படப்பிடிப்பு அவுட்டோரில் நடந்தது. படப்பிடிப்பு முடியும் போது சம்பளம் கொடுக்கும் நேரத்தில் தயாரிப்பாளர் தரப்பில் கொண்டு வந்த மொத்த பணமும் திருடு போனது தெரியவந்தது.
பணம் பறி போன விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போது என்ன செய்வது? தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துவதா? இல்லை கேன்சல் செய்வதா? தொழிலாளர்களுக்கு சம்பளத்தை எப்படி கொடுப்பது என தெரியாமல் கண்ணாம்பாவும், அவரது கணவரும் இடிந்து போய் உட்கார்ந்து விட்டனர்.
தொழிலாளர்களும், நடிகர், நடிகையரும் இந்தப் பிரச்சனையை எம்ஜிஆரின் காதுகளுக்குக் கொண்டு சென்றனர். எம்ஜிஆர் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அனைவரையும் வரவழைத்து தைரியம் சொன்னார். அது மட்டுமல்லாமல் படப்பிடிப்பு நிற்க வேண்டாம். அவுட்டோர் படப்பிடிப்பு நடக்கட்டும்.
எல்லா பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன். பணத்திற்கும் ஏற்பாடு செய்கிறேன் என்றார். அதுமட்டுமின்றி தனது சத்யா பிலிம்ஸ் குஞ்சப்பனுக்கு டிரங்க் கால் போட்டு பேசி படப்பிடிப்பு தொகை 5 லட்சத்தைக் கொண்டு வரச் செய்து அனைவருக்கும் சம்பளம் போட்டாராம். கண்ணாம்பா எம்ஜிஆரைத் தனியாக சந்தித்து தனக்கு செய்த உதவியை மறக்காமல் என்றென்றும் நன்றிக்கடனோடு இருப்போம் என்று கூறியுள்ளார்.
ஆனால் இவ்வளவு சிக்கல்களையும் கடந்து வெளியான படம் மாபெரும் தோல்வியை சந்தித்தது. சொல்லப்போனால் எம்ஜிஆர், சரோஜாதேவி நடிப்பில் வெளியான எந்தப் படங்களுமே சோடை போனதில்லை. அப்படி இருந்தும் இந்தப் படம் தோல்வி அடைந்தது கண்ணாம்பாவை நிலைகுலையச் செய்தது.
இதனால் தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்த நிலையில் தான் தியாகராய நகரில் கண்ணாம்பாள் தனது வீட்டை விற்க முயற்சி செய்த போது அந்த வீட்டை எம்ஜிஆரே விலை கொடுத்து வாங்கி இறுதி காலம் வரை நீங்கள் இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும். வேறு வீட்டிற்குப் போகக் கூடாது என அவரிடமே கொடுத்துள்ளார் புரட்சித்தலைவர்.
கண்ணாம்பாவும் தனது கடைசி காலம் வரை அந்த வீட்டில் தான் இருந்தார். அவர் இறந்த பிறகு தான் எம்ஜிஆர் அந்த வீட்டைப் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்தாராம். தமிழ்த்திரை உலகில் அதிகளவு சம்பளம் வாங்கிய நடிகை கே.பி.சுந்தராம்பாள்.
அதற்கு அடுத்தபடியாக அதிகம் சம்பளம் வாங்கிய தென்னிந்திய நடிகை கண்ணாம்பாள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிக்காலத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டு 1964ல் இறந்தார் அந்த மாபெரும் நடிகை.