இந்த நடிகைக்காக தன் கால்ஷீட்டையே அட்ஜஸ்ட் செய்துள்ளார்...புரட்சித்தலைவர்...அது யார் தெரியுமா?
ஊர்வசி சாரதா.... தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 4 மொழிகளில் கொண்டாடப்படும் நடிகை. 3 முறை தேசிய விருது பெற்ற முதல் இந்திய நடிகை. யதார்த்தமான இவரது நடிப்பு அனைவரையும் கட்டிப்போட்டு விட்டது. நடிப்புக்கான அன்றைய தேசிய விருது ஊர்வசி விருது என்று அழைக்கப்பட்டதால் இவர் ஊர்வசி சாரதா ஆனார். தமிழில் குறைவான படங்களைத் தந்திருந்தாலும் நிறைவான நடிப்பு இவருடையது.
1945ல் வெங்கடேஷ்வரராவ் - சத்யவதி தம்பதியினருக்கு மகளாக ஆந்திரா மாநிலம் குண்டூரில உள்ள தெனாலியில் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சரஸ்வதி தேவி. 6வயதில் பரதம் கற்றுக்கொண்டார்.
தனது 11வது வயதில் என்டிராமராவ் நடித்த தெலுங்குபடமான தன்யாசுல்தத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 13வது வயது முதல் நாடகங்களில் கதாநாயகியாக நடித்தார். சாரதாவின் குடும்பத்தினர் சென்னை வந்து குடியேறினர்.
அந்;த சமயத்தில் தெலுங்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன. தொடர்ந்து நாடகங்களிலும் நடித்து வந்தார். சாரதாவை தமிழ்ப்படத்திற்கு அறிமுகப்படுத்தியவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.
திருப்பதி என்ற நாடகத்தில் சாரதா நடித்துக்கொண்டிருந்தபோது அந்த நாடகத்திற்குத் தலைமை தாங்கச் சென்றார் நடிகர் திலகம் சிவாஜி. நாடகத்தில் சாரதாவின் நடிப்பைப் பார்த்த சிவாஜி வியந்து 1963ல் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான குங்குமம் என்ற படத்தில் சாரதாவை அறிமுகப்படுத்தினார்.
இந்தப்படத்தில் 2ம் கதாநாயகியாக வரும் இவர் சிவாஜி பாடும் காலங்கள் தோறும் திருடர்கள் என்ற பாடலில் அழகான துள்ளல் நடனத்தை சூப்பராக ஆடியிருப்பார். அதே படத்தில் இவர் வரும் தூங்காத கண்ணொன்று உண்டு...
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை ஆகிய பாடலும் இன்று கேட்டாலும் இனிமையானவை. தொடர்ந்து ஞான ஒளி, என்னைப்போல் ஒருவன், சரித்திர நாயகன் உள்ளிட்ட பல படங்களில் சிவாஜியுடன் இணைந்து நடித்தார். துளசி மாடம், வாழ்க்கை வாழ்வதற்கே போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
ஞானஒளியில் கயவனிடம் ஏமாறும் பேதைப்பெண்ணாகவும், அபலையாகவும் நடித்திருப்பார். பின்னர் தந்தை சிவாஜி திரும்பி வருகையில் அடையாளம் கண்டு அழைக்கையில் காவல் அதிகாரியைக் கண்டு பாவத்தை மாற்றி பேசி மெருகேறிய நடிப்பை வெளிப்படுத்தினார்.
1975ல் வெளியான நினைத்ததை முடிப்பவன் படத்தில் எம்ஜிஆரின் தங்கையாக ஊனமுற்றவர் வேடத்தில் மிகவும் அருமையாக நடித்திருந்தார். இந்த வேடத்திற்குப் பொருத்தமானவர் சாரதா தான் என்று கூறியவர் எம்ஜிஆர். அப்போது அவர் தெலுங்கு, மலையாளப் படங்களில் பிசியாக இருந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. அப்போது எம்ஜிஆர் அந்தப் பொண்ணுக்கு எப்போது முடியுமோ அப்போது நடிக்கட்டும். அதற்கு ஏற்றாற் போல நான் கால்ஷீட் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம்.
அந்தப் பொண்ணு நடித்தால் தான் சரியாக இருக்கும் என்றாராம். அவர் சொன்னது போலவே கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்து கொடுத்துள்ளார் எம்ஜிஆர். இந்தப்படத்திற்குப் பிறகு தமிழகத்தில் சாரதா எங்கு சென்றாலும் சாரதா என்றே அழைப்பதில்லை. வாத்தியார் தங்கச்சி என்றே அழைத்தனர். போலீஸ் அதிகாரி, டாக்டர், வக்கீல் என எல்லாவேடங்களிலும் நடித்த சாரதா தமிழில் வெறும் 15 படங்கள் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவரது அபார நடிப்பைப் பயன்படுத்திக்கொண்ட மலையாளப்பட உலகம் இவரை மொத்தமாகப் பயன்படுத்தி கொண்டது. 1986ல் வெளியான மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்துள்ளார். 1996ல் தெனாலி பாராளுமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்பியாகவும் இருந்துள்ளார்.