Cinema History
ஏம்பா நீதான் எம்.ஜி.ஆரா?!.. பணம் கொடுத்த பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த பாட்டி!..
எம்.ஜி.ஆர் என்றால் வள்ளல் என்பதுதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். சிறு வயது முதலே வறுமையை பார்த்தவர். வாழ்க்கையில் பல கஷ்டங்களை பார்த்தவர். பல அவமானங்களை சந்தித்து மேலே வந்தவர். ஏழு வய்து முதல் நாடகங்களில் நடித்து பின்னால் சினிமாவில் நுழைந்தவர். பட்டினியோடு பல நாட்கள் இருந்தவர் என்பதால் பசியின் கொடுமையை அறிந்தவர். அதனால்தான் யாரை சந்தித்தாலும் அவர் கேட்கும் முதல் கேள்வியே ‘சாப்பிட்டீர்களா?’ என்பதுதான்.
சினிமாவில் சம்பாதித்த பணத்தில் பெரும்பங்கு மற்றவர்களுக்கு உதவுவதிலேயே எம்.ஜி.ஆர். செலவு செய்தார். அவரிடம் வந்து கஷ்டம் என யார் கையேந்தி நின்றாலும் அள்ளி கொடுத்தார். பல குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும், படிப்பு, திருமணம், மருத்துவ செலவு என பலவற்றுக்கும் உதவியிருக்கிறார். அதனால்தான் அவர் வசித்து வந்த இராமாபுரம் தோட்டத்தில் அவரிடம் உதவி கேட்பதற்காகவே எப்போதும் ஒரு பெருங்கூட்டம் காத்திருக்கும். முடிந்தவரை பலரிடமும் பேசி அவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுப்பார்.
தன்னை தேடி வருபவர்களுக்கு மட்டுமல்ல. காரில் செல்லும் போது அவர் கண்ணில் படும் பலருக்கும் உதவியுள்ளார். யாரேனும் கஷ்டப்படுவதை அவர் பார்த்துவிட்டால் உடனே வண்டியை நிறுத்திவிட்டு அவரின் பிரச்சனையை தீர்த்துவிட்டுத்தான் அங்கிருந்து கிளம்புவார். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. எனவே, அள்ளி கொடுத்தால் அது எம்.ஜி.ஆர் தான் என்கிற நம்பிக்கை பலருக்கும் இருந்த காலகட்டம் அது.
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக பிரபலமானவர் பாலாஜி. பல திரைப்படங்களை தயாரித்ததோடு, பல படங்களில் நடித்தும் இருக்கிறார். சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்தவர் இவர். இவர் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஒருமுறை காரில் சென்று கொண்டிருந்த போது விழுப்புரம் ரயில்வே கேட் அருகே கார் நின்றது.
அங்கே ஒரு வயதான, கண் தெரியாத மூதாட்டி பிச்சை எடுத்துகொண்டிருந்தார். அவரை பார்த்து பரிதாபப்பட்ட பாலாஜி ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிய மூதாட்டி ‘இது எவ்வளவுப்பா.. ஒரு ரூபா தாளா?. பத்து ரூபா தாளா?’ என கேட்க பாலாஜியோ ‘இது நூறு ரூபாய் தாளம்மா’ என சொல்ல, அந்த மூதாட்டி ‘தம்பி நீ எம்.ஜி.ஆரா?. ரொம்ப சந்தோஷம்பா. நீ நல்லா இருக்கணும் தம்பி’ என தனது மகிழ்ச்சியை காட்டினாராம்.
பணம் கொடுத்தது பாலாஜி. ஆனால், அந்த பெயர் போனது எம்.ஜி.ஆருக்கு. மக்களின் மனதில் இவ்வளவு இடம் பிடித்திருக்கிறாரா எம்.ஜி.ஆர்? என பாலாஜி ஆச்சர்யப்பட்டு அதையும் ரசித்தாராம்.