காதல் மன்னன் ஜெமினிகணேசனுடன் அதிகமான படங்களில் ஜோடி சேர்ந்த நடிகை...மயக்கும் விழிகளுக்குச் சொந்தக்காரி...சொப்பன சுந்தரி இவர் தான்..!

தென்னிந்திய சினிமாவில் மயக்கும் விழிகளால் ரசிகர்களைக் கவர்ந்து தனக்கென தனி இடம் பிடித்தவர் அஞ்சலி தேவி. 1950களுக்குப் பிறகு நடித்த நடிகைகளுக்கு மிகவும் பிடித்த நடிகை இவர். தன் குறும்புப் பார்வை, உணர்ச்சிமயமான நடிப்பு, நளினமான நடனம், நாகரீகமான உடையலங்காரம் போன்றவற்றின் மூலம் டி.ஆர்.ராஜகுமாரிக்குப் பிறகு தென்னிந்திய சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்தார் அஞ்சலி தேவி.

Anjanamma

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெத்தாபுரம் என்ற ஊரில் மூக்கையா சத்யவதி தம்பதியினருக்கு 24.8.1927ல் பிறந்தார். இவரது இயற்பெயர் அஞ்சலிகுமாரி. பெற்றோர்கள் செல்லமாக அஞ்சனம்மா என்றே அழைப்பர். இவருடன் சுப்புலட்சுமி, கிருஷ்ணகுமாரி என இரு சகோதரிகள் மற்றும் பக்கீர் என ஒரு சகோதரரும் பிறந்தனர்.
இவருக்கு 5வயதாகும்போது இவரது குடும்பம் காக்கிநாடாவுக்குச் சென்றது. இவரது பள்ளிப்படிப்பும் அங்கேயே தொடங்கியது. சிறுவயதிலேயே ஆடல், பாடல், நடிப்பு போன்ற கலைகளில் ஆர்வமாக இருந்தார். நாட்டியம் கற்றுக்கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்ததால் படிப்பைத் தொடர முடியவில்லை.

தொடர்ந்து ஆந்திரா முழுவதும் ஊர் ஊராக நடத்தப்பட்ட நாடகங்களில் பங்கேற்று புகழ்பெற்றார். இவரது அழகும், நடனமும் எல்லோரையும் கவர்ந்தது. காக்கி நாடாவில் உள்ள ஆதிநாராயணராவ் என்ற இளைஞரையும் ஈர்த்தது.

தெலுங்கு சினிமாவின் இசை அமைப்பாளரான இவர் அப்போது சொந்தமாக நாடகங்கள் தயாரித்து இயக்கி வந்தார். அதன் மூலம் அஞ்சனம்மாவையும் தனது நாடகங்களில் நடிக்க வைத்தார். அதில் தெருப்பாடகன், லோபி ஆகிய நாடகங்கள் புகழ்பெற்றன.

அவரது பெயரும் அஞ்சம்மா, அஞ்சனகுமாரி, அஞ்சலிகுமாரி என மாறிக்கொண்டே இருந்தது. தொடர்ந்து ஆதியின் நாடகங்களில் நடித்து வந்ததால் அஞ்சனம்மாவுக்கு அவர் மேல் காதல் வந்தது. 11.8.1942ல் அவரை மணம் புரிந்தார். அப்போது அஞ்சனம்மாவின் வயது 13 தான். அன்று தான் மகாத்மா காந்தியால் வெள்ளையனே வெளியேறு இயக்கம் அறிவிக்கப்பட்டது.

1943ல் இரண்டாம் உலகப்போர் பிரச்சார நிதிக்காக கவர்னர் போப் நடத்திய நாட்டிய நிகழ்ச்சியில் அஞ்சலிதேவி சென்னை நகரமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இந்நிகழ்ச்சியில் அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

Anjalidevi

அப்போது அவரது நடனமும் அழகும் அனைவரையும் கிறங்கடித்தது. சி.புள்ளையா என்ற தெலுங்குப்பட இயக்குனரையும் கவர்ந்தது. மறுநாளே தனது படத்தின் நாயகியாக நடிக்க ஆதிநாராயணராவிடம் அனுமதி கேட்டார். அவரும் அதற்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

புள்ளையாவின் பொல்லபாமா என்ற தெலுங்கு படத்தில் தனது 16வது வயதில் அறிமுகமானார். அன்று முதல் அவர் அஞ்சலிதேவியானார். 1945ல் வெளியான இப்படம் சென்னையிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

1947ல் மகாத்மா உதங்கர் என்ற தமிழ்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். படம் வெற்றி பெறவில்லை. 1948ல் மாடர்ன் தியேட்டர்ஸின் ஆதித்தன் கனவு படத்தில் நடித்தார். இதில் டி.ஆர்.மகாலிங்கத்திற்கு ஜோடியாக நடித்தார். இந்தப்படம் அவரை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்த்தது.

1950, 1951ல் அஞ்சலி தேவி ஆண்டுகளாகக் குறிப்பிடலாம். எங்கு பார்த்தாலும் அஞ்சலி தேவி படப் போஸ்டர்கள் தான். மாயக்காரி, மாயமாலை, நிரபராதி போன்ற பெரும்பாலான படங்கள் தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தன. இந்த ஆண்டில் அஞ்சலிதேவி கதாநாயகியாக நடித்த நேரடி தமிழ்ப்படங்கள் எது என்றால் சர்வாதிகாரி, மர்மயோகி படங்கள் தான். இப்படங்களில் அஞ்சலி தேவிக்கு ஜோடியாக எம்ஜிஆர் நடித்து இருந்தார்.

MGR, Anjalidevi

டி.கே.சண்முகம் குழுவினரின் ரத்த பாசம் நாடகத்தைப் படமாக நினைத்தனர். அதில் அஞ்சலிதேவியை நடிக்க வைக்க எண்ணி நாடகத்தைப் பார்க்க அவரை அழைத்துச் சென்றனர். அதில் தான் நடிக்க வேண்டிய கேரக்டரில் எம்என்.ராஜம் நடித்திருந்தார்.

அவரது அபார நடிப்பைப் பார்த்த அஞ்சலிதேவி அவரையே நடிக்க வைக்க வேண்டியது தானே என்றார். சக நடிகைகளின் வாய்ப்பை ஒருபோதும் தட்டிப்பறிக்க விரும்பாதவர் அஞ்சலிதேவி. இது டி.கே.சண்முகம் குழுவினரை ஆச்சரியப்பட வைத்தது. அதன்பிறகு படத்தின் முக்கியத்துவத்திற்காக அவரை நடிக்க வைக்க பேசினர். முடிவில் அஞ்சலிதேவி அதில் நடிக்க சம்மதித்தார்.

1954ல் ஏவிஎம் தயாரிப்பில் வெளியான பெண் படத்தில் அஞ்சலிதேவி நடித்தார். இதில் தான் ஜெமினிகணேசன் அறிமுகமானார். அந்த காதல் மன்னனுக்கு முதல் ஜோடி அஞ்சலிதேவி தான். கணவனே கண்கண்ட தெய்வம், காலம் மாறிப்போச்சு, மணாளனே மங்கையின் பாக்கியம், இல்லறமே நல்லறம், பூலோக ரம்பை, வீரக்கனல் என அதிக படங்களில் அஞ்லிதேவியுடன் ஜோடி சேர்ந்தார் ஜெமினிகணேசன்.

KKT

தாய்க்குலமே அஞ்சலிதேவியை நோக்கி கைதொழுத படம் கணவனே கண்கண்ட தெய்வம். இந்தப்படத்தில் இருந்து இவருக்கு பெண் ரசிகைகள் அதிகமானது. இந்தப்படத்திற்கு ஈடு இணை இன்று வரை எதுவும் வரவில்லை. வசூலிலும் வரலாறு படைத்த படம் இதுதான்.

இந்தப்படத்தில் உணர்ச்சிகரமான ஒரு காட்சியில் பாறை சுவற்றில் உண்மையாகவே மோதி தலையில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. பின்னர் மயங்கி விழுந்த அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. அஞ்சலி பிலிம்ஸ் நிறுவனத்தைத் தொடங்கிய இவர் 27 சொந்தப்படங்களையும் தயாரித்துள்ளார்.

அவற்றில் அனார்கலி பிலிம்பேர் விருதைப் பெற்றது. பூங்கோதை என்ற படத்தை இவர் தயாரித்தார். இதுதான் சிவாஜியின் முதல் படம். ஆனால் தாமதமாக வெளியானதால் பராசக்தியில் அறிமுகம் என போடப்பட்டது.

சிவாஜி அஞ்சலிதேவியை முதலாளியம்மா என்றே தான் அழைப்பார். உரிமைக்குரல் படத்தில் எம்ஜிஆருக்கு அண்ணியாக நடித்துள்ளார். 1979ல் அன்னை ஓர் ஆலயம் படத்தில் ரஜனிக்கு அன்னையாக நடித்தார். 1987ல் காதல் பரிசு படம் தான் இவரது கடைசி படம். 2014ல் தனது 86வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.

Related Articles
Next Story
Share it