Cinema History
அழகு.. நடிப்பு.. நடனம்.. எல்லாத்திலும் டாப்!.. கருப்பு வெள்ளை காலத்திலும் கலக்கிய நடிகைகள்!..
அந்தக் காலத்து நடிகைகள் என்றால் கண்களிலேயே பேசுவார்கள். நடித்து அசத்துவார்கள். நளினங்கள் இவர்களுக்கு அழகு ஆபரணங்கள். ஆனால் இப்போ உள்ள நடிகைகளுக்கு மேக் அப் மட்டுமே அழகு. இல்லாவிட்டால் இவரா அந்த நடிகை என கேட்டு விடுவார்கள். அதனால் நாம் அந்தக் காலத்துக்கேச் செல்வோம். அவர்கள் யார் யார் என பார்க்கலாம் வாங்க…
சாவித்திரி
ஆந்திராவைச் சேர்ந்தவர். இயற்பெயர் சசிகலாவாணி. 1952ல் ஜெமினிகணேசனை மணமுடித்தார். பாசமலர், பாவமன்னிப்பு, கொஞ்சும் சலங்கை, படித்தால் மட்டும் போதுமா, பரிசு, கற்பகம் ஆகிய படங்களில் இவரது நடிப்பு அபாரமாக இருக்கும். அழகு மட்டுமின்றி அபாரமான நடிப்பையும் வெளிப்படுத்தியதால் இவர் நடிகையர்திலகம் என்றே அழைக்கப்பட்டார்.
பத்மினி
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். குச்சிப்புடி, பரதம், மோகினயாட்டத்தில் புகழ் பெற்றவர். அதனாலேயே இவர் நாட்டியப்பேரொளி என்று அழைக்கப்பட்டார். மணமகள், வேதாள உலகம், தில்லானா மோகனாம்பாள், வஞ்சிக்கோட்டை வாலிபன் ஆகிய படங்களில் இவரது நடிப்பு மெச்சும்படியாக இருக்கும்.
சரோஜாதேவி
கர்நாடகாவைச் சேர்ந்தவர். இயற்பெயர் ராதாதேவி கவுடா. மைசூர் ராஜ்ஜியத்தில் பிறந்தார். நடிக்கும்போது அதற்கேற்ப நளினமாகக் காட்டும் இவரது முகபாவனைகள் காண்போர் நெஞ்சைக் கொள்ளை அடித்து விடும்.
அதனாலேயே இவரை அபிநய சரஸ்வதி என்றும் கன்னடத்துப் பைங்கிளி என்றும் அழைத்தனர். மகாகவி காளிதாஸ், பெண் என்றால் பெண், நாடோடி மன்னன், கல்யாணப் பரிசு ஆகிய படங்களில் அழகு தவழும் இவரது நடிப்பைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை எனலாம்.
வைஜெயந்தி மாலா
சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தார். இந்திய நடன கலைஞர். நடிப்பிலும் அசாத்திய திறமை மிக்கவர். வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, சித்தூர் ராணி பத்மினி, தேன் நிலவு, மர்ம வீரன் உள்பட பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
மனோரமா
தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோபிசாந்தா. 1500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரது முதல் படம் மாலையிட்ட மங்கை. கொஞ்சும் குமரி, வல்லவனுக்கு வல்லவன், தில்லானா மோகனாம்பாள், பாட்டி சொல்லைத் தட்டாதே, அபூர்வ சகோதரர்கள், புதிய பாதை, சின்னக்கவுண்டர் ஆகிய படங்களில் இவரது நடிப்புப் பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது. நடிப்பு மட்டுமல்லாமல் இவர் சிறந்த பாடகியும் கூட.
கே.ஆர்.விஜயா
கேரளா திருச்சூரைச் சேர்ந்தவர். இயற்பெயர் தெய்வநாயகி. ஜீவ பூமி, நெஞ்சிருக்கும் வரை, தங்கை, நாம் பிறந்த மண், பாரத விலாஸ், கிரகப்பிரவேசம், திரிசூலம், கல்தூண், கந்தன் கருணை, தீர்க்கசுமங்கி, விவசாயி, ஊட்டி வரை உறவு படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களைத் தன்பால் ஈர்த்தவர். இவர் பல பக்திப்படங்களிலும் நடித்து தாய்மார்களைக் கொள்ளை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.