பழைய படங்களில் கெத்து காட்டிய பாடகிகள்... சொல்லி அடித்த கில்லி இவங்கதான்!..

Singers
தமிழ்ப்பட உலகில் ஆண்குரலே வராமல் முழுக்க முழுக்க பாடகிகளே பாடி வெளியான படங்களும் வந்துள்ளன. இந்தப் படங்கள் எவை என்று பார்க்க வேண்டும் என்றால் பழைய படங்களுக்கான வரலாற்றைப் புரட்ட வேண்டும். அவற்றில் இருந்து தேடிப்பிடித்துப் பார்த்தால் 3 படங்கள் கிடைத்துள்ளன. என்னென்ன படங்கள் என்று பார்ப்போமா...
காரைக்கால் அம்மையார்
1973ல் வெளியான படம். இந்தப் படத்தில் பெரும்பாலான பாடல்களைப் பாடியவர் கே.பி.சுந்தராம்பாள். இவரைத் தவிர வேறு யாராவது பாடகர்கள் பாடி இருக்கிறார்களா என்றால் இல்லை. மீதம் உள்ள பாடல்களை எஸ்.வரலட்சுமியும், பி.சுசீலாவும் பாடியுள்ளனர். படம் பக்தி பரவசம் ததும்பும் வகையில் எடுக்கப்பட்ட படம். தாய்மார்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கற்பகம்

Karpagam
1963ல் வெளியான படம். இந்தப் படத்தில் எல்லா பாடல்களையும் பி.சுசீலாவே பாடியுள்ளார். பாடல்களை வாலி எழுதியுள்ளார். இந்தப் படம் தான் வாலிக்குப் பெரிய திருப்பமுனையைத் தந்தது. அந்தக் காலத்தில் கண்ணதாசனுக்குப் போட்டி யார் என்றால் வாலியைத் தான் சொல்வார்கள்.
படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட் ரகங்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். ஆயிரம் நிலவுகள் வருவதுண்டு, பக்கத்து வீட்டு, மன்னவனே அழலாமா, அத்தை மடி மெத்தையடி ஆகிய மனது மறக்காத பாடல்கள் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றுள்ளன. 1963ல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம். ஜெமினிகணேசன், சாவித்திரி நடித்த சூப்பர்ஹிட் படம்.
ஒளவையார்
1953ம் ஆண்டின் சுதந்திரத்தினத்தன்று இந்தப் படம் வெளியாகி உள்ளது. படத்தில் 17 பாடல்கள். இவற்றில் 16 பாடல்களை கே.பி.சுந்தராம்பாள் பாடி அசத்தியுள்ளார். ஒரே ஒரு பாடலை எஸ்எஸ்.மணி பாகவதர் பாடினார். இதில் மட்டும் ஏன் ஆண்குரல் வருகிறது என்று கேட்கலாம். வேறு எந்தப் படத்திலும் ஒரே ஒரு பாடலை மட்டும் பாடகருக்குக் கொடுக்கவில்லை என்பதால் இதுவும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது அந்தக் காலத்திலேயே பிரம்மாண்டமான செட்டுகள் போடப்பட்டு எடுக்கப்பட்ட மாபெரும் வெற்றிச்சித்திரம்.