ஓடிடியிலும் ஹிட் அடித்த குடும்பஸ்தன்!.. இனிமே மணிகண்டன் ரேஞ்சே வேற!..

Manikandan: கோலிவுட்டில் திறமை மிக்க ஒரு இளைஞராக வலம் வருபவர் மணிகண்டன். யுடியூபர், கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர், நடிகர் என இவருக்கு பல முகங்கள் உண்டு. இப்போதுதான் மனிகண்டன் சினிமாவில் பிரபலமாகியிருக்கிறார். ஆனால், கடந்த 10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார்.
துவக்கத்தில் நண்பர்களுடன் இணைந்து யுடியூப் சேனலை நடத்தி வந்தார். அதன்பின் குறும்படங்களை இயக்கினார். நடிகர் கமலின் தீவிர ரசிகர் இவர். நிறைய புத்தகங்களை படிப்பவர் என்பதால் எந்த டாப்பிக்காக இருந்தாலும் அதை பற்றி பேசும் அளவுக்கு இவருக்கு ஞானம் உண்டு. விக்ரம் வேதா படத்திற்கு வசனம் எழுதியவர் மணிகண்டன்தான்.
மேலும், பீசா 2, விஸ்வாசம், தம்பி போன்ற படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். நரை எழுதும் சுய சரிதம் என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். காலா படத்தில் ரஜினியின் மகன்களில் ஒருவராக வருவார். அதன்பின் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் படத்தில் மணிகண்டன் ஏற்ற வேடம் ரசிகர்களை உருக வைத்தது. இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.

இதன் தொடர்ச்சியாக குட் நைட் மற்றும் லவ்வர் போன்ற படங்களில் நடித்தார். இதில் குட் நைட் படம் நல்ல வசூலை பெற்றது. அதன்பின் அவரின் நடிப்பில் வெளியான படம்தான் குடும்பஸ்தன். ஒரு குடும்பஸ்தன் குடும்பத்தை ஓட்ட கடன்களை வாக்கி எப்படி சிக்கிக் கொள்கிறான் என்பதை காமெடியாக சொல்லியிருந்தார்கள். 10 கோடி பட்ஜெடில் உருவான இப்படம் 27 கோடி வரை வசூல் செய்தது.
இந்நிலையில், குடும்பஸ்தன் திரைப்படம் சமீபத்தில் ZEE5 ஓடிடி தளத்திலும் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தை இதுவரை 50 மில்லியன் (5 கோடி) பார்வையாளர்களை பெற்றுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது இனிமேல் மணிகண்டனின் படங்களுக்கு ஓடிடி நிறுவனங்கள் அதிக விலை கொடுக்க தயாராக இருப்பார்கள் என்றே கணிக்கப்படுகிறது.
எனவே, வித்தியாசமான, நல்ல கதைகளை வைத்திருக்கும் இயக்குனர்கள் மணிகண்டனை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளாமல் அதில் சிறந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தான் தேர்ந்தெடுக்கும் கதை வெற்றிபெறும் என்பது தெரிந்தால் மட்டுமே அதில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.