Squid Game : ஏமாற்றிய சீசன் 2... ஸ்குவிட் கேம் சீசன் 3 அறிவிப்பை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்
Squid game: நெட்ஃபிளிக்ஸின் பிரபல தொடரான ஸ்குவிட் கேம் மூன்று குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி பிரபலமாக பேசப்பட்டது கொரியன் வெப் தொடரான ஸ்குவிட் கேம். முதல் சீசன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
400க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் 5 போட்டிகள் நடத்தப்படும். இதில் தோல்வியடையும் வீரர்கள் அப்போதே சுட்டுக் கொல்லப்படுவார்கள். இதில் ஹீரோ எப்படி தப்பித்து போட்டிகளிலும் வென்று உயிருடன் தப்பித்தார் என்பதை முதல் சீசன் காட்டி இருக்கும்.
ஆனால் அந்த சீசனின் முடிவிலே ஹீரோ இரண்டாவது சீசனுக்கு பயணிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டாவது சீசனுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
மூன்று ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் இரண்டாவது சீசன் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி வெளியானது. பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்கள் சீசனை விடாமல் பார்த்து முடிக்க பெரிய ஏமாற்றம் அடைந்தனர்.
முதல் சீசனை போல இல்லாமல் நிறைய கேள்விகளுடன் இந்த சீசன் முடிக்கப்பட்டிருந்தது. முடிவில்லாமல் முடிக்கப்பட்ட சீசன் குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதிருப்தியை தெரிவித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து, தற்போது ஸ்குவிட் கேமின் மூன்றாவது சீசன் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த பதிவில், 2025 ஆம் ஆண்டில் மூன்றாம் சீசன் வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் இந்த ஆண்டு மே மாதத்திலோ, வருடத்தின் கடைசியிலோ மூன்றாவது சீசனை வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது சீசனில் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் தற்போது தான் சற்று ஆசுவாசமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.