“என்னோட படத்த ஒருத்தர் கூட பாராட்டல”.. “அந்த படம் மட்டும் தான் ஒத்துக்குட்டாங்க”.. மனம் திறக்கும் பா ரஞ்சித்

by Arun Prasad |
“என்னோட படத்த ஒருத்தர் கூட பாராட்டல”.. “அந்த படம் மட்டும் தான் ஒத்துக்குட்டாங்க”.. மனம் திறக்கும் பா ரஞ்சித்
X

பொதுவாக பா ரஞ்சித் திரைப்படங்கள் ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலை மையமாக வைத்தே உருவாக்கப்படும். அவர் இயக்கிய முதல் திரைப்படமான “அட்டக்கத்தி” ஒரு காமெடி கலந்த காதல் திரைப்படம் என்றால் அதிலும் சில அரசியல் குறியீடுகளை வைத்திருப்பார் என சில சினிமா விமர்சகர்கள் கூறுவது உண்டு.

ஆனால் “மெட்ராஸ்” திரைப்படம் வெளிப்படையான ஒரு அரசியல் திரைப்படமாகவே உருவானது. மேலும் அத்திரைப்படம் நடிகர் கார்த்திக்கு ஒரு மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாகவும் அமைந்தது.

பா ரஞ்சித் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய “கபாலி” திரைப்படம் வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றிருந்தாலும், “காலா” கொஞ்சம் சறுக்கியது. அதனை தொடர்ந்து “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படம் ஓடிடியில் வெளிவந்திருந்தாலும் நல்ல வரவேற்பை பெற்றது.

பா ரஞ்சித் தனது அரசியல் சம்பந்தமாக அவரது திரைப்படங்களில் வைக்கும் காட்சிகளோ வசனங்களோ ஒரு தரப்பினர் கொண்டாடினாலும் சிலர் சர்ச்சையாக பார்ப்பதும் உண்டு. இந்த நிலையில் சமீபத்தில் “நட்சத்திரம் நகர்கிறது” என்ற திரைப்படம் வெளிவந்தது.

மதம், ஜாதி, பாலினம் ஆகிய தடைகளை தாண்டியதே காதல் என்ற நவீன போக்கை தனது திரைப்படத்தில் மிகவும் துணிச்சலாக கையாண்டிருந்தார் பா ரஞ்சித். எனினும் இத்திரைப்படமும் சர்ச்சைக்குள்ளானது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது திரைப்படங்களுக்கான அங்கீகாரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் பா ரஞ்சித். அதில் “பொது தளத்தில் இருப்பவர்கள் என்னுடைய திரைப்படம் வெற்றிப்பெற்றால் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றியை மட்டும் தான் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும் ஒரு பிரபல பத்திரிக்கை அத்திரைப்படத்தை மிகவும் மோசமாக விமர்சித்திருந்தார்கள். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது” என கூறினார்.

மேலும் பேசிய அவர் “சார்பட்டா பரம்பரையை உலக அரங்கில் எல்லாம் கொண்டாடினார்கள். ஆனால் இவர்களுக்கு இத்திரைப்படம் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்வதிலேயே பல பிரச்சனைகள் இருக்கிறது” என மிகவும் மனம் திறந்து கூறினார்.

Next Story