எம்.ஜி.ஆருக்கு பாட்டெழுத மறுத்த பஞ்சு அருணாச்சலம்… காரணம் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!
தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனரும் வசனக்கர்த்தாவுமான பஞ்சு அருணாச்சலம், “ஆறிலிருந்து அறுபது வரை”, “கழுகு”, “தம்பிக்கு எந்த ஊரு”, “மைக்கேல் மதன காமராஜன்”, “வீரா” போன்ற பல திரைப்படங்களை தயாரித்து உள்ளார்.
பஞ்சு அருணாச்சலம் தொடக்க காலத்தில் கவியரசர் கண்ணதாசனுக்கு உதவியாளராக இருந்தார். அப்போது ஒரு காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. ஆதலால் தன்னுடைய திரைப்படங்களுக்கு கண்ணதாசனை ஒப்பந்தம் செய்யக்கூடாது என தனது தயாரிப்பாளர்களுக்கு கட்டளை போட்டார் எம்.ஜி.ஆர்.
இந்த நிலையில் 1965 ஆம் ஆண்டு ஜி.என்.வேலுமணி என்ற தயாரிப்பாளர், எம்.ஜி.ஆரை வைத்து “கலங்கரை விளக்கம்” என்ற திரைப்படத்தை தயாரித்து வந்தார். அப்போது அத்திரைப்படத்திற்கு பாடல்கள் எழுத பஞ்சு அருணாச்சலத்திற்கு வாய்ப்பு வந்தது.
“கலங்கரை விளக்கம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “என்னை மறந்ததேன்”, “பொன்னெழில் பூத்தது” போன்ற பாடல்களை பஞ்சு அருணாச்சலம் எழுதினார். இப்பாடல்களை ஒலிப்பதிவு செய்த பிறகு, எம்.ஜி.ஆர் அப்பாடல்களை திரும்ப திரும்ப கேட்டாராம்.
உடனே இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஜி.என்.வேலுமணியை அழைத்து “இந்த பாடல்களை பஞ்சு அருணாச்சலம்தான் எழுதியதாக கூறினீர்கள். ஆனால் நான் நம்பமாட்டேன். இது கண்ணதாசன் எழுதிய பாடல்கள்தான். என்னை ஏமாற்றாதீர்கள்” என கூறினாராம் எம்.ஜி.ஆர்.
“இல்லை. இது பஞ்சு அருணாச்சலம் எழுதியதுதான்” என வேலுமணி எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் எம்.ஜி.ஆர் கேட்கவில்லையாம். “வேறு ஒரு கவிஞரை வைத்து பாடல்களை பதிவு செய்யுங்கள்” என கூறிவிட்டாராம் எம்.ஜி.ஆர்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நேராகச் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்து, அவரிடம் “இப்பாடல்களை எல்லாம் கண்ணதாசன் எழுதவில்லை. பஞ்சு அருணாச்சலம்தான் எழுதியது” என எடுத்துக்கூறினார். அதன் பிறகுதான் எம்.ஜி.ஆர் நம்பினாராம்.
மேலும் “இனி எனது திரைப்படங்களில் பஞ்சு அருணாச்சலத்திற்கு பாடல்கள் எழுத வாய்ப்பு வழங்குங்கள்” எனவும் கூறினாராம் எம்.ஜி.ஆர். ஆனால் தான் கண்ணதாசனுக்கு உதவியாளராக பணிபுரிந்த காரணத்தாலும், கண்ணதாசனை பகைத்துக்கொண்ட ஆட்களுக்கு தான் பாடல்கள் எழுத விரும்பாத காரணத்தினாலும் எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல்கள் எழுதுவதற்காக வந்த வாய்ப்பை பஞ்சு அருணாச்சலம் மறுத்துவிட்டாராம்.