பாக்யராஜ் திட்டியதால் பாண்டியராஜனுக்கு அடித்த லாட்டரி… அதிர்ஷ்டம்ன்னா இப்படில்ல இருக்கனும்!!
சில நம்பமுடியாத சம்பவங்களை கேள்விப்படும்போது “இதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும்” என கூறுவார்கள். ஆனால் யதார்த்த வாழ்வில் சினிமாவை விடவும் சுவாரஸ்யமான சம்பங்கள் நடப்பது உண்டு. அப்படிப்பட ஒரு சம்பவத்தை இப்போது பார்க்கலாம்.
தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்த பாண்டியராஜ், “கன்னிராசி”, “ஆண் பாவம்”, “கோபாலா கோபாலா” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். பாண்டியராஜன் தொடக்க காலத்தில் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ்ஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.
அதுவும் பாக்யராஜ்ஜிற்கு மிகவும் நம்பத்தகுந்த உதவி இயக்குனராக பாண்டியராஜன் திகழ்ந்தாராம். ஒரு முறை பாக்யராஜ் ஒரு திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருந்தபோது அது சம்பந்தமான சில வேலைகளை பாண்டியராஜன் சரியாக செய்யவில்லையாம். ஆதலால் பாக்யராஜ், பாண்டியராஜனை கண்டபடி திட்டியிருக்கிறார்.
அன்று இரவு பாக்யராஜ் அவரது அறையில் உறங்கிகொண்டிருந்தபோது பாண்டியராஜன் கதவை தட்டினாராம். கதவை திறந்தவுடன் பாண்டியராஜன், பாக்யராஜ்ஜின் காலில் விழுந்துவிட்டாராம்.
இதை பார்த்த பாக்யராஜ், பாண்டியராஜனிடம் “என்னய்யா நடுராத்திரி கதவை தட்டி கால்ல விழுந்துட்டு இருக்க, என்ன விஷயம்?” என கேட்டாராம். அதற்கு பாண்டியராஜன் “நீங்கள் இன்று காலையில் என்னை திட்டியதால்தான் எனக்கு ஒரு நன்மை நடந்திருக்கிறது” என கூறினாராம்.
இதனை கேட்ட பாக்யராஜ் எதுவும் புரியாமல் “நான் திட்டியதால் உனக்கு என்னப்பா நன்மை நடந்தது?” என கேட்டாராம். அதற்கு பாண்டியராஜன் “நீங்கள் என்னை திட்டியதை பார்த்த ஒரு தயாரிப்பாளர், என்னிடம் வந்து ‘பாக்யராஜ் திட்டியதை பார்க்கும்போது, அவர் உங்கள் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பார் என தெரிகிறது. அப்படி என்றால் நீங்கள் பெரிய திறமைசாலியாகத்தான் இருப்பீர்கள். எனது அடுத்த திரைப்படத்திற்கு நீங்கள்தான் இயக்குனர்’ என கூறிவிட்டு என்னிடம் அட்வான்ஸ் கொடுத்தார். என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என நடந்ததை கூறினாராம். இதனை கேட்ட பாக்யராஜ்ஜிற்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை என்றாலும் பாண்டியராஜனை வாழ்த்தி அனுப்பிவிட்டாராம்.