
Cinema News
பார்த்திபனுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டம்… ஏவிஎம் செய்த கைமாறு… ஆனா நீங்க நினைக்குற மாதிரி இல்ல…
1993 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், மீனா, நெப்போலியன், ஐஸ்வர்யா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “எஜமான்”. இத்திரைப்படத்தை ஆர்.வி.உதயக்குமார் இயக்கியிருந்தார். ஏவிஎம் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது.

Yajaman
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது முக்கிய காட்சி ஒன்றில் ஐஸ்வர்யா நடிக்க வேண்டி இருந்தது. அப்போது ஐஸ்வர்யா, பார்த்திபன் இயக்கிக்கொண்டிருந்த “உள்ளே வெளியே” திரைப்படத்திலும் நடித்துக்கொண்டிருந்தார்.

Aishwarya
“எஜமான்” திரைப்படத்தின் அந்த காட்சியை படமாக்கவேண்டிய நாட்களில் ஐஸ்வர்யாவின் கால்ஷீட் பார்த்திபனிடம் இருந்தது. பார்த்திபனிடம் கேட்டு அந்த கால்ஷீட்டை வாங்கினால்தான் ஐஸ்வர்யாவின் காட்சியை எடுக்கமுடியும். ஆதலால் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், பார்த்திபனிடம் சென்று தன்னுடைய நிலையை கூறினார்.
‘ஏவிஎம் சரவணனே நம்மிடம் வந்து கேட்கிறாரே, எப்படி தராமல் இருக்க முடியும்” என நினைத்த பார்த்திபன், உடனே ஐஸ்வர்யாவின் 3 நாட்களுக்கான கால்ஷீட்டை தந்துவிட்டார். அதன்பின் “எஜமான்” படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் இதனால் பார்த்திபனுக்குத்தான் மிகப்பெரிய நஷ்டம். இதனை ஏவிஎம் சரவணனும் உணர்ந்திருந்தார்.

AVM Saravanan
பார்த்திபனின் நஷ்டத்தை சரிகட்ட வேண்டும் என ஏவிஎம் சரவணன் நினைத்தார். ஆதலால் பார்த்திபனை அழைத்து ஒரு குறிப்பிட்டத் தொகையை அவரிடம் கொடுத்தார் ஏவிஎம் சரவணன்.
இதனை தொடர்ந்து “எஜமான்” திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. அதற்கான வெற்றிவிழாவும் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பார்த்திபனும் கலந்துகொண்டார்.
அப்போது மேடையில் பேசிய ஏவிஎம் சரவணன், “ஐஸ்வர்யாவின் கால்ஷீட்டை பார்த்திபன் தந்து உதவியதனால்தான் இத்திரைப்படத்தை திட்டமிட்ட நாட்களில் எங்களால் முடிக்க முடிந்தது. அவர் மட்டும் கால்ஷீட்டை விட்டுக்கொடுக்கவில்லை என்றால் திரைப்படத்தை முடிக்க தாமதம் ஆகியிருக்கும். பார்த்திபன் பெரிய மனதோடு உதவியதால்தான் இப்படம் சரியான தேதியில் வெளிவந்தது. மேலும் மிகப்பெரிய வெற்றியும் அடைந்தது” என கூறினார்.

Parthiban
ஏவிஎம் சரவணனின் பேச்சை கேட்ட பார்த்திபன் நெகிழ்ந்துபோனார். இதன் பின் பார்த்திபன் ஒரு பேட்டியில் இது குறித்து பேசியபோது “அன்று ஐஸ்வர்யாவின் கால்ஷீட்டை விட்டுக்கொடுத்த பின் ஏவிஎம் சரவணன் என்னிடம் பணம் கொடுத்தார். அவர் பணம் படைத்தவர், அதனால் பணம் கொடுக்கிறார் என நினைத்தேன். ஆனால் அந்த விழாவில் அவர் பேசியதை கேட்டப்பின் ,அவர் மிகப்பெரிய மனம் படைத்தவர். ஆதலால்தான் அந்த பணத்தை கொடுத்திருக்கிறார் என்ற உண்மை தெரியவந்தது” என பேசியது குறிப்பிடத்தக்கது.