இது பத்து தலயா? இல்ல ஒத்த தலையா?.. நிஜமாவே படம் எப்படி இருக்கு?.. திரை விமர்சனம்…
சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “பத்து தல”. இத்திரைப்படத்தை ஓப்லி என்.கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஃபருக் ஜே.பாஷா இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல். இத்திரைப்படத்திற்கு படத்தொகுப்பை கவனித்துள்ளார்.
இதில் கௌதம் வாசுதேவ் மேனன், அனு சித்தாரா, ரெடின் கிங்க்ஸ்லி, கலையரசன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இத்திரைப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்தோடு இத்திரைப்படத்தை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இத்திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை குறித்து இப்போது பார்க்கலாம்.
கதை
தமிழ்நாட்டின் முதல்வருக்கும் அவரது சகோதரரான கௌதம் மேனனுக்கும் இடையே இருக்கும் பிரச்சனையில் முதல்வர் கடத்தப்படுகிறார். முதல்வர் கடத்தப்பட்ட செய்தி தமிழ்நாட்டை பதறவைக்க, தற்காலிக முதல்வராக மணல் கடத்தல் தொழில் செய்யும் தாதாவான சிம்புவின் விசுவாசி கிருஷ்ணா பொருப்பேற்கிறார். இதனால் கௌதம் மேனனுக்கும் கிருஷ்ணாவுக்கு மோதல் ஏற்படுகிறது.
போலீஸாக வரும் கௌதம் கார்த்திக் சிம்புவின் ஆட்களில் ஒருவராக நுழைந்து இந்த விவகாரத்தை வேவு பார்க்கிறார். கடைசியில் முதல்வர் என்ன ஆனார்? கௌதம் கார்த்திக் தான் நினைத்ததை சாதித்தாரா என்பதே கதை.
மாஸ் காட்டும் சிம்பு
ஏஜிஆர் என்ற கதாப்பாத்திரத்தில் சிம்பு மிகவும் டெரராக நடித்திருக்கிறார். அவரது ஒவ்வொரு அசைவும் மாஸாக இருக்கிறது. குறிப்பாக சிம்புவின் குரல் கம்பீரமான தாதா கதாப்பாத்திரத்திற்கு மேலும் கம்பீரத்தை சேர்த்துள்ளது. ஆக்சன் காட்சிகளில் எங்குமே தாவி தவ்வி அடிக்காமல், அந்த தாதாவுக்குரிய கம்பீரத்துடனே நடித்திருக்கிறார்.
கௌதம் கார்த்திக் படம் முழுவதும் வந்தாலும் சிம்புவிற்கு முன் அவரது நடிப்பு கொஞ்சம் டல் அடிக்கிறது. பிரியா பவானி சங்கர், அனு சித்தாரா, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாப்பாத்திரங்களில் மிகச்சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் பலம்
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஃபரூக்கின் கேமரா புகுந்து விளையாடுகிறது. பிரவீன் கே.எல்லின் படத்தொகுப்பு நறுக்கென்று இருக்கின்றது.
மைனஸ்கள்
சிம்பு இடைவேளையில்தான் வருகிறார். அது மாஸாக இருந்தாலும் படத்தின் கதைக்கு அது சம்பந்தமே இல்லாதது போல் தோன்றுகிறது. திரைக்கதையில் ஆங்காங்கே சற்று சறுக்கல் இருக்கிறது. எனினும் பார்வையாளர்களுக்கு நல்ல விருந்தாகவே அமைந்திருக்கிறது “பத்து தல”.