Connect with us

பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆன பாட்டுக்கு நான் அடிமை

Cinema History

பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆன பாட்டுக்கு நான் அடிமை

கடந்த 1990ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு அன்று வெளியான திரைப்படம் பாட்டுக்கு நான் அடிமை. செயின்ராஜ் ஜெயின், சந்திரப்பிரகாஷ் ஜெயின் இப்படத்தை தயாரித்து இருந்தனர். இந்த படத்தில் ராமராஜன், ரேகா, குஷ்பு, லிவிங்ஸ்டன், கவுண்டமணி , செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தை அந்த நேரத்தில் பிரபலமாக இருந்த இயக்குனர் சண்முகப்பிரியன் இயக்கி இருந்தார்.

இவர், ஒருவர் வாழும் ஆலயம், மதுரைவீரன் எங்கசாமி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சில முக்கிய படங்களுக்கு கதை வசனகர்த்தாவாக 90களி பணியாற்றியுள்ளார்.

பாட்டுக்கு நான் அடிமை படத்தின் கதை கிராமத்தில் உதாசீனப்படுத்தப்படும் கிராமநாயகனான ராமராஜன் நகரத்துக்கு சென்று பாட்டுப்பாடி முன்னேறும் கதை.

நன்கு பாடத்தெரிந்தவரான கிராம பாடகரான ராமராஜன் மாமா கவுண்டமணியால் அவமானப்படுத்தப்படுகிறார். அதனால் சென்னை சென்று பாடகராக முயற்சி செய்கிறார். மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் குஷ்புவின் நட்பு கிடைக்கிறது .குஷ்பு சில நண்பர்களுடன் சேர்ந்து இசை ஆல்பம் தயாரிக்க முயற்சி செய்கிறார். ராமராஜனின்  பாடல் திறமையை பார்த்து ராமராஜனை பாட வைக்க முயற்சி செய்கின்றனர்.

இதன் மூலம் இசைத்துறையில் பிரபலமும் ஆகிறார். இதற்கு நடுவில் கிராமத்தில் ரேகாவுடன் ஏற்பட்ட காதலால் குஷ்புவின் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் இதனால் குஷ்பு கன்னியாஸ்திரி ஆகிறார்.

இப்படியாக செல்லும் கதையில் இறுதியில் ராமராஜன் ரேகாவை மணந்தாரா, தன்னை அவமானப்படுத்தியவர்களை ஜெயித்தாரா என்பது கதை.

கதை சாதாரணமான கதைதான். ஆனால் திரைக்கதை வலுவாக இருந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரிய ஹிட் ஆனதுதான் படத்திற்கு பெரும்பலமாக இருந்தது.

தடக் தடக் ரயில் சத்தத்தில் ராமராஜன் பாடும் பாடலான தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு என்ற பாடலை இசைஞானி வித்தியாசமான ஒலிக்கலவைகளுடன் இசையமைத்திருந்தார். இனிய சோகமும் அன்பும் கலந்த இப்பாடல் ரயில் சத்தம் மற்றும் வயலின் சத்தம் இணைந்து அருமையாக இருந்தது மனோ பாடி இருந்தார்.

கிராமத்தில் இருந்து நகரத்துக்கு சென்ற உடன் பாடும் புள்ளி வச்சா ஒரு பொன்னாத்தா, வெளிநாட்டினர் முன் பாடும் அத்திமரக்கிளி கத்தும் போன்ற பாடல்களை மலேசியா வாசுதேவன்  பாடி இருந்தார். இவை வேற லெவல் பாடல்கள் என சொல்லலாம். லேசான கிராமத்து இசையையும் ராப், ஜாஸ் மியூசிக்கையும் இப்பாடல்களில் இளையராஜா கலந்து கொடுத்திருந்தார்.

க்ளைமாக்ஸில் வரும் யார் பாடும் பாடல் என்றாலும் என்ற பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது. கடுமையான காயங்களுடன் ராமராஜனும், ரேகாவும் மனம் உருகி பாடும் இந்த பாடலை மலேசியா வாசுதேவன், ஜானகி பாடி இருந்தனர். மிகச்சிறந்த மனதை வருடும் சோகப்பாடல் இது.

க்ளைமாக்ஸ் பாடலான இந்த பாடல் அனைவரையும் கட்டிப்போட்டது. பாடல்களை தவிர்த்து இந்த படத்தின் கதையின் சிறப்பம்சம் என்னவென்றால் முதலில் சில மணி நேரங்கள் வரும் கவுண்டமணி, செந்தில், ராமராஜன், பாண்டு கூட்டணியினரின் காமெடி என்று சொல்லலாம்.

கஞ்ச மகா பிரபுவாக கவுண்டமணி, அவர்கள் வீட்டில் உறவினராக வந்து சேரும் ராமராஜனை வைத்து காமெடிகள் வரும்.

குறிப்பாக ராமராஜன் சாப்பிட உட்கார்ந்து சாப்பிடும்போது சுற்றி உட்கார்ந்து கொண்டு ராமராஜனும் , கவுண்டமணியும் பேசிக்கொள்ளும் காட்சிகள் என்றும் மறக்க முடியாதவை அப்பளம் எங்க இருக்கு , ரசம் எங்க இருக்கு, ஊறுகாய் எங்க இருக்கு என ராமராஜன் கேட்பவற்றுக்கெல்லாம் கவுண்டமணி அடிக்கும் பஞ்ச் நெத்தியடியாய் இருக்கும்.

காலம் கடந்தாலும் இப்படத்தின் பாடல்களாலும் சிறந்த கதை மற்றும் காமெடியாலும் இப்படம் மறக்க முடியாதது என சொல்லலாம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top