இதனால்தான் உங்கள் படத்தில் வேலை செய்யவில்லை!.. பி.சி.ஸ்ரீராம் சொன்னதை கேட்டு நெகிழ்ந்து போன ஷங்கர்..
தமிழ் சினிமாவில் வித்தியாசமான, புதுமையான ஒளிப்பதிவை அறிமுகம் செய்து வைத்தவர் பி.சி.ஸ்ரீராம். அதனால்தான் கமல்ஹாசன், மணிரத்தினம் போன்றவர்கள் இவரை அதிகம் பயன்படுத்தினார்கள். மணிரத்தினம் இயக்கிய மௌன ராகம், அக்னி நட்சத்திரம், இதயத்தை திருடாதே, திருடா திருடா, நாயகன், ஓகே கண்மனி, அலைபாயுதே போன்ற படங்களுக்கு அவர் ஒளிப்பதிவு செய்தார்.
அதேபோல், கமலின் 100வது படமான ராஜ பார்வை, குருதிப்புனல் போன்ற பாடங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும் அவர்தான். தமிழ் திரையுலகின் முக்கிய ஒளிப்பதிவாளர் இவர். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பல ஹிந்தி படங்களுக்கும் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவரின் சிஷ்யர்களாக இருந்த ஜீவா, கே.வி.ஆனந்த் என பலரும் பின்னாளில் பெரிய ஒளிப்பதிவாளர்களாகவும் இயக்குனர்களாகவும் மாறினார்கள்.
இதையும் படிங்க: இதெல்லாம் என்னங்க பாடல்வரி? வைரமுத்துவை குறைச் சொன்ன பிரபல இயக்குனர்… ட்விஸ்ட் கொடுத்த இளையராஜா
மணிரத்னம் - கமல் - பி.சி.ஸ்ரீராம் ஆகியோரின் படங்களை பார்த்து 90களில் சினிமாவுக்கு வந்த பல இயக்குனர்களுக்கும் தங்கள் படங்களில் பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இதில், ஷங்கரும் ஒருவர். இவர் இயக்கிய ஜென்டில்மேன், காதலன் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் பிசி ஸ்ரீராமின் உதவியாளர் ஜீவா.
3வதாக ஷங்கர் இந்தியன் படத்தை இயக்கியபோது பி.சி.ஸ்ரீராமிடம் சென்று ‘இந்த படத்தில் நீங்கள் ஒளிப்பதிவு செய்ய வேண்டும்’ என கேட்க பிசி ஸ்ரீராம் ‘என்னால் முடியாது ஷங்கர். ஒரு ஹிந்தி படத்தில் ஒளிப்பதிவு செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறேன்’ என சொல்ல ஏமாற்றமடைந்த ஷங்கர் இந்தியன் படத்துக்கும் ஜீவாவையே ஒப்பந்தம் செய்தார்.
இந்தியன் படம் முடிந்து 4வதாக ஷங்கர் ஜீன்ஸ் படத்தை இயக்கியபோது அப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் ஒளிப்பதிவு செய்தார். அப்படம் வெளியான பின் ஒரு விழாவில் ஷங்கரிடம் பேசிய பிசி ஸ்ரீராம் ‘ உங்கள் படத்தில் வேலை செய்ய விரும்புகிறேன். வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள்’ என கேட்க, ஷங்கருக்கு மிகுந்த சந்தோஷம். அதேநேரம், அவரின் மனதில் ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது.
இதையும் படிங்க: செம வைலண்ட்டாக இருந்த ரஜினி!. அம்மாவை போல வந்து காப்பாற்றிய சமூக சேவகி.. ஆச்சர்ய தகவல்!..
அது என்னவெனில் ஹிந்தி படத்தை ஒப்புக்கொண்டதாக சொல்லி இந்தியன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய மறுத்த பிசி ஸ்ரீராம் அப்படி எந்த படத்திலும் வேலை செய்யவில்லை. மனதில் இருந்த கேள்வியை ஷங்கரும் அவரிடம் கேட்டார். அதற்கு பதில் சொன்ன ஸ்ரீராம் ‘உங்களின் முதல் 2 படங்களிலும் வேலை செய்தது என் சிஷ்யன் ஜீவா. 3வது நீங்கள் இயக்கிய இந்தியன் படத்தின் ஹீரோ கமல். எனவே, கமல் படத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என அவன் ஆசைப்படுவான்.
அதை நான் தட்டி பறிக்க கூடாது என்பதற்காகத்தான் உங்களிடம் அப்படி சொன்னேன். 4வதாக நீங்கள் அசோக் குமாரை வைத்து படம் எடுத்துவிட்டீர்கள். இப்போது உங்களுடன் பணிபுரிய எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என சொன்னாராம். நெகிழ்ந்து போனாராம் ஷங்கர். பின்னாளில் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் இல்லன்னா என்ன!.. இப்போ பிளாக் பாண்டி யாரு படத்துல நடிக்கிறாருன்னு பாருங்க!..