திருட்டு விசிடிக்கு முடிவு கட்ட வித்திட்ட பேரழகன்...பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் சொல்கிறார்
ஒரு காலத்தில் திரையங்கிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று படம் பார்க்கச் செல்வார்கள். அதன் பின் திருட்டு விசிடி வந்து மக்களின் வருகையை வெகுவாகக் குறைத்தது. அதை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதன்பிறகு மொபைல் போன்களின் ஆதிக்கம்...இணையதளம் என திரையரங்கிற்கு சென்று படம் பார்க்க வருவோரின் வருகையைக் குறைத்தது.
அதனால் திரைப்படங்களில் புதிய புதிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு திரையரங்கிற்கு ரசிகர்களை வரவழைத்தனர். அதே போல திரையரங்கிலும் ஒலி ஒளி நுட்பத்தில் புதுமையைப் புகுத்தினர்.
என்னதான் இருந்தாலும் தியேட்டர் ஆடியன்ஸ் இருப்பதாலும், சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களாலும் ரசிகர்களின் எண்ணிக்கைப் படத்திற்கேற்ப அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் திருட்டு விசிடியால் பாதிக்கப்பட்ட படம் பேரழகன். அதுபற்றியும், திருட்டு விசிடி ஒழிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து ஏவிஎம் பட அதிபர் எம்.சரவணன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் குஞ்சுக் கோனன். அந்தப் படத்தைப் பார்த்ததும் கதை பிடித்து விட்டது. தமிழில் எடுக்க உரிமை வாங்கினோம். சூர்யாவுக்குப் படத்தைப் போட்டுக் காட்டினோம்.
அவருக்கும் கதை பிடித்திருக்கிறது என்றதும் எப்போது முடியுமோ அப்போது கால்ஷீட் தந்தால் போதும் என்கிறார்.
அவரோ நல்ல கதை என்றதால் உடனே கால்ஷீட் தந்துவிட்டார். மலையாளத்தில் 2 கேரக்டர் தனித்தனியாக நடித்ததை தமிழில் ஜோதிகா ஒருவN செய்தார். மலையாளப்படத்தை இயக்கிய சசி சங்கரே தமிழிலும் இயக்கினார். படத்திற்குப் பேரழகன் என்று பெயர் வைத்தோம்.
கூன் முதுகுடன் சூர்யாவின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது. எல்லோரும் வியந்து பாராட்டினர். ஒவ்வொரு பிரேமிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நடித்தார். தினமும் அவரது அருமையான நடிப்புப் பற்றிய தகவல் எனக்கு வந்த வண்ணம் இருந்தது. அனைத்து மீடியாக்களுமே அவரது நடிப்பைப் புகழ்ந்தன. அந்தப் படத்தின் விளம்பரத்தில் ஒரு புதுமையை செய்தோம்.
ஹைதராபாத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக வாஜ்பாய் வடிவில் ஒரு பலூன் விளம்பரம் செய்தார்கள். அதே போல இந்தப்படத்திற்காக சூர்யாவின் கூனன் கேரக்டரைப் போட்டு ஒவ்வொரு திரையரங்கின் வாசலிலும் பலூனைப் பறக்கவிட்டோம். அதை மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் செய்திருக்கும். ஆனால் அந்த நேரம் திருட்டு விசிடி என்ற வில்லனால் பேரழகன் பெரிதும் பாதிக்கப்பட்டான். அப்போது 30 ரூபாய்க்கு பேரழகன் விசிடி விற்கப்பட்டதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அதே போல் மெரீனா பீச்சில் 30 ரூபாய்க்கு பேரழகன் சிடி விற்கிறது என்று சொன்னவர் யார் தெரியுமா? என் மனைவி லட்சுமி.
எங்களது பேரழகன் படத்தைப் போலவே பல படங்கள் திருட்டு விசிடியால் பாதிக்கப்பட்டன. 2004ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு திருட்டுவிசிடியால் வரும் பிரச்சனைகள் குறித்து கடிதம் எழுதியிருந்தேன். உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். திருட்டு விசிடி விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார்.
இந்தப்படம் 2004ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.