நாடகம் பார்க்க வந்த பெரியார்… கீழே உட்காரச் சொன்ன எம்.ஆர்.ராதா…ஆனால் நடந்ததோ ஆச்சரியம்!!
“நடிகவேல்” என்று பெயர் பெற்ற எம்.ஆர்.ராதா, புரட்சிகரமான கருத்துகளை தனது திரைப்படங்களின் மூலம் வெளிப்படுத்தி மக்களை தன்வசப்படுத்தியவர். எம்.ஆர்.ராதா என்றாலே நமக்கு ஞாபகம் வருவது “இரத்த கண்ணீர்” என்ற திரைப்படம்தான்.
அத்திரைப்படத்தில் அவர் நடித்த நடிப்பும், அவர் பேசும் வசனங்களும் இப்போதும் மிகப் பிரபலமானவை. அந்த அளவுக்கு பல சிந்தனைகளை கிளப்பும்படி வசனங்களை அமைத்திருப்பார்கள். அந்த காலத்தில் மிகப்பெரும் வெற்றித்திரைப்படமாக ‘இரத்த கண்ணீர்” அமைந்தது.
எம்.ஆர்.ராதா பல திரைப்படங்களில் அப்போதுள்ள டாப் ஸ்டார்களான எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். தனது தனித்துவ நடிப்பின் மூலமாக பல்வேறு ரசிகர்களை தன் கையில் வைத்திருந்தார்.
எம்.ஆர்.ராதா சினிமாத் துறைக்கு வருவதற்கு முன்பே நாடகத்துறையில் இருந்தார். பற்பல நாடகங்களில் நடித்து வந்த எம்.ஆர்.ராதா அப்போதே மிகவும் பிரபலமாக இருந்தார்.
இந்த நிலையில் ஒரு நாள், எம்.ஆர்.ராதா நாடகத்தை பார்க்க தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லை. அவ்வளவு கூட்டம் இருந்திருக்கிறது.
அதனை பார்த்த நாடக நிர்வாகி, அவசரமாக ஓடி வந்து எம்.ஆர்.ராதாவிடம் “தந்தை பெரியாரும், அண்ணாவும் வந்திருக்கிறார்கள்” என கூறியுள்ளார். அதற்கு எம்.ஆர்.ராதா “எதுக்கு வந்திருக்காங்க?” என சாதாரணமாக கேட்டாராம்.
“அவர்கள் நாடகத்தை பார்க்கத்தான் வந்திருக்கிறார்கள்” என நிர்வாகி கூறியிருக்கிறார். அதற்கு “நாடகத்தை பார்க்க வந்திருக்கிறார்கள் என்றால் பார்க்கட்டும்” என கூறினாராம் எம்.ஆர்.ராதா.
அதன் பின் நிர்வாகி “எப்படி அவர்களை பார்க்கச்சொல்வது. முன் வரிசையில் ஒரு இடம் கூட இல்லையே” என கூறியிருக்கிறார். அதற்கு எம்.ஆர்.ராதா “அவர்கள் அவசியம் என் நாடகத்தை பார்க்க வேண்டும் என்றால் தரையில் உட்கார்ந்து பார்த்துக்கொள்ளட்டும்” என கூறியிருக்கிறார்.
இதை கேட்டவுடன் ஆச்சரியப்பட்ட நிர்வாகி “வந்திருப்பது பெரியாரும், அண்ணாவும். அவர்களை எப்படி கீழே உட்காரச்சொல்வது” என கேட்டிருக்கிறார். அதற்கு எம்.ஆர்.ராதா “நான் என்னை விட பெரியவர்களாக யாரையும் நினைப்பதில்லை” என கூறியிருக்கிறார்.
எம்.ஆர்.ராதாவின் இந்த பதிலால் அதிர்ச்சியான நிர்வாகி, என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் பார்வையாளர்கள் இருக்கும் இடத்திற்கு வந்திருக்கிறார். அப்போது அவர் கண்ட காட்சி அவருக்கு ஆச்சரியத்தை மூட்டியுள்ளது. அதாவது பெரியாரும், அண்ணாவும் நாடகம் பார்க்க தரையில் உட்கார்ந்துவிட்டனர். அந்த நாடகம் முடிவடையும் வரையில் அவர்கள் தரையிலேயே உட்கார்ந்து பார்த்திருக்கிறார்கள்.
அதை விட முக்கியமானது என்னவென்றால், அந்த நாடகம் முடிவடைந்த பிறகு பெரியாரும், அண்ணாவும் மேடை ஏறி எம்.ஆர்.ராதாவை பாராட்டியும் இருக்கிறார்கள்.