Cinema History
ஆபாச நாடகமா? எம்.ஆர்.ராதாவை கைது செய்த போலீஸ்! கடைசில என்னாச்சு தெரியுமா?
அந்தக் காலத்தில் தமிழ் சினிமாவில் நாடகம் மேடையில் ஒரு ஒப்பற்ற கலைஞராக திகழ்ந்தவர் நடிகர் எம்.ஆர்.ராதா. எம்.ஆர்.ராதா ,எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற நடிகர்கள் எல்லாம் சமகாலத்து நடிகர்கள் ஆவர். இவர்கள் அனைவருமே நாடகத்திலிருந்து வந்தவர்கள் இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் ஒரு ராஜபாட்டாக இருந்தவர் எம்.ஆர்.ராதா.
பெரியாரின் கருத்துகளால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அதுவரை நாடகத்தில் ராஜா கதைகள், புராணக் கதைகள் இவற்றை போட்டுக் கொண்டிருந்த எம்.ஆர்.ராதா சமூக கருத்துக்களை கையில் எடுத்தார். அதுவும் தனது ரத்தக்கண்ணீர் என்ற நாடகத்தின் மூலம் ஒரு பெரிய புரட்சியையே ஏற்படுத்தினார். அந்த நாடகத்தில் தனக்கு தொழுநோய் வந்த பிறகு தன் மனைவி நல்லா இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தன் நண்பனுக்கு மனைவியாக்கும் ஒரு கதாபாத்திரத்தில் எம்.ஆர்.ராதா புரட்சியை ஏற்படுத்தி இருப்பார்.
இந்த நிலையில் அவரின் ராமாயணம் என்ற நாடகம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நாடகத்தைப் பார்த்த அனைவரும் அந்த நாடகத்தை தடை செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். அதனால் அந்த நாடகத்தின் மூலம் அவர் கிட்டத்தட்ட 365 நாட்களில் 250 நாட்கள் கோர்ட்டுக்கும் வீட்டிற்குமே அலைந்தார்.
தினந்தோறும் போலீசார் அவரை கைது செய்து அழைத்துக் கொண்டு போக கோர்ட்டில் ஜாமீன் வாங்கி வெளியே வந்து திரும்பவும் மாலையில் நாடகத்திற்கு நடிக்க போய்விடுவார் எம்.ஆர்.ராதா. இதனால் அந்த நாடகம் சம்பந்தமான கேஸ் ஐகோர்ட் நீதிமன்றத்திற்கு வந்ததாம். அப்போது அவரிடம் நீதிபதி இப்படி ஆபாசமாக நாடகத்தை நடத்துரீயே? எனக் கேட்டாராம்.
அதற்கு எம்.ஆர்.ராதா “நான் ஆபாசமாக நடத்தவில்லை. வால்மீகி ராமாயணம் தான் போடுகிறேன். அதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் நான் சொல்கிறேன்” என கூறினாராம். உடனே அந்த நாடகத்திற்கான கதை வசனகர்த்தாவான திருவாரூர் தங்கராஜை அழைத்து அவரிடமும் விசாரித்தார்களாம். திருவாரூர் தங்கராஜன் “ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் எல்லாவற்றையும் சொல்லுங்கள்” எனக் கேட்க நீதிமன்றமும் என்னென்ன கருத்துக்கள் எல்லாம் ஆட்சேபனைக்குரியதோ அதை கொடுத்து இருக்கிறார்கள்.
அதைக் கேட்ட திருவாரூர் தங்கராஜன் “இந்த ஆட்சேபனைக்குரிய கருத்துக்களுக்கு வால்மீகியில் உள்ள ஸ்லோகங்களை எடுத்துப்போட்டு இதைத்தான் நாங்களும் நாடகத்தில் சொல்லி இருக்கிறோம்” என கூறினாராம். இதற்கும் ஒத்துப் போகாத நீதிமன்றம் உடனே ஓரு ஐயரை அழைத்து அவரிடமும் இந்த கருத்துக்களை பற்றி கேட்டிருக்கிறது .அவரும் நான் என்ன பண்ணுவது? வால்மீகியில் இப்படித்தான் இருக்கிறது, அவர்கள் போடுவது எல்லாமே வால்மீகி ராமாயணம் தான். அதில் உள்ள ஸ்லோகங்கள் எல்லாம் அந்த அர்த்தங்களைத்தான் கொண்டிருக்கிறது. நான் என்ன பண்ண முடியும்? அவர்கள் சொல்லுவதும் நியாயம் தானே! என்று கூறினாராம்.
இதையும் படிங்க : படப்பிடிப்பில் கண்டபடி மகனை திட்டிய சிவாஜி..! – பயந்து ஓடிய நடிகை…
இதையெல்லாம் விசாரித்த நீதிமன்றம் கடைசியில் ஜட்ஜ்மெண்ட் ஆக “எங்கள் மனசு புண்படுகிறது. அரசு ரீதியாக உங்களை ஒன்றும் பண்ண முடியவில்லை. அதனால் இதை கொஞ்சம் நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்ததாம். இருந்தாலும் அந்த நாடகத்தை தடை பண்ண முடியவில்லையாம். அந்த அளவுக்கு எம்.ஆர்.ராதா தன் கருத்துக்களில் உறுதியாக நின்றார் என இந்த சுவாரசிய நிகழ்வை அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் ஒரு பேட்டியில் கூறினார்.