அலைகள் ஓய்வதில்லை படத்துக்குப் பாராட்டு விழா நடத்திய கட்சி - பின்னணி தெரியுமா?
இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1981-ம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருந்த ஒரு முக்கியமான கட்சி, அந்தப் படத்துக்காக மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்திய சம்பவம் பற்றி தெரியுமா?
தன்னுடைய உதவி இயக்குநர் மணிவண்ணனின் கதைக்குத் திரைக்கதை வடிவம் கொடுத்து பாரதிராஜா அலைகள் ஓய்வதில்லை படத்தை எடுத்தார். பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக், நடிகை ராதா ஆகிய இருவரும் ஹீரோ, ஹீரோயினாக இந்தப் படம் மூலமாகத்தான் அறிமுகமானார்கள்.
அதேபோல், பிளாஸ்டிக் நிறுவனம் ஒன்றில் மேலாளராக இருந்த தியாகராஜனுக்கும் இந்தப் படம்தான் அறிமுகப்படம். இவர்கள் மூவருமே தங்களின் கதாபாத்திரங்களுக்கு வாய்ஸ் கொடுக்கவில்லை. கார்த்திக்குக்கு சுரேந்தர், ராதாவுக்கு அனுராதா மற்றும் தியாகராஜன் கதாபாத்திரத்துக்கு பாரதிராஜாவே பின்னணிக் குரல் கொடுத்திருந்தார். இளையராஜா - வைரமுத்து கூட்டணியில் பாடல்களும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன.
அதுவரை கவர்ச்சி நடிகையாகவே இருந்துவந்த நடிகை சில்க் ஸ்மிதா, இந்தப் படத்தில் தியாகராஜனின் மனைவியாக கனமான குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். அந்த நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்துப் பையன், கிறிஸ்தவப் பெண் ஒருத்தி மீது காதல் கொள்வது போன்ற புரட்சிகரமான கதையும் கிளைமேக்ஸும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. முழுக்க முழுக்க கன்னியாகுமரியில் படமாக்கப்பட்ட அலைகள் ஓய்வதில்லை படம் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக வரலாற்றில் பதிவாகிவிட்டது.
இதையும் படிங்க: எனக்கு படம் பண்ண சொல்லுங்க!..பண்ணவே முடியாது!..பாரதிராஜாவிடம் சவால் விடும் பிரபல நடிகை!..
அலைகள் ஓய்வதில்லை படத்தைப் பார்த்துவிட்டு அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் வெகுவாகப் பாராட்டினாராம். பாரதிராஜாவை நேரில் சந்தித்தும் பாராட்டுகளைத் தெரிவித்த எம்.ஜி.ஆர், படத்தில் நடித்த கலைஞர்கள் உள்பட படக்குழுவினருக்காகப் பாராட்டு விழா ஒன்றை நடத்தவும் திட்டமிட்டார். இதற்காக அ.தி.மு.க சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் மிகப்பெரிய பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது படக்குழுவினர் அனைவருக்கும் அ.தி.மு.க சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட எம்.ஜி.ஆர், இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர், நடிகைகளை வெகுவாகப் பாராட்டினார்.
குறிப்பாக சில்க் ஸ்மிதா பற்றி பேசுகையில், 'ராதாவின் அண்ணி கதாபாத்திரத்தில் குடும்பப் பாங்காக சிறப்பாக நடித்திருக்கும், ஸ்மிதா இனி கிளாமரான கேரக்டர்களில் நடிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்’ என்று மேடையிலேயே எம்.ஜி.ஆர் குறிப்பிட்டார். அதுதான் சில்க் ஸ்மிதாவின் ஆசையாகவும் இருந்தது.