சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து சாதித்தவர்கள்
தமிழ்;த்திரையுலகம் விசித்திரமானது. ஏறுமுகம் என்றால் ஒரே ஏறுமுகம் தான். நடிகர்களைத் தூக்கி வாரி அணைத்த இந்த திரையுலகம் அவர்களை ஒரு படி மேல் போய் முதல் அமைச்சர்களாகவும் ஆக்கி விட்டது. அப்படி வந்தவர்கள் தான் அண்ணாத்துரை, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள். இவர்கள் தவிர கிட்டத்தட்ட வெற்றிக்கோட்டை நெருங்கியவர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான். அதனால் தான் அவரால் எதிர்க்கட்சித் தலைவராக முடிந்தது.
சீமான் நாம் தமிழர் என்ற ஒரு புரட்சிகரமான கட்சியை நடத்தி வருகிறார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இவர்கள் தவிர இன்னும் ஒரு சில நடிகர்கள் கட்சியை ஆரம்பித்தார்கள். ஆனால் சீக்கிரமே காணாமல் போய்விட்டார்கள். நாம் நடப்பில் உள்ளவர்களையும், சாதித்தவர்களையும் பார்ப்போம்.
அறிஞர் அண்ணா
சி.என்.அண்ணாத்துரை பெரியார் கொள்கைகளில் ஆர்வம் மிக்கவர். அதனால் அவரது நீதிக்கட்சியில் சேர்ந்தார். தொடர்ந்து அவருடன் திராவிடக்கழகத்தில் இணைந்து செயலாற்றினார்.
அவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 1949ல் திராவிட முன்னேற்றக்கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். 1969ல் தமிழக முதல்வர் ஆனார். தமிழ், ஆங்கிலத்தில் சிறந்த மொழிப்புலமை கொண்டவர்.
மு.கருணாநிதி
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் இவர். 2006ல் தமிழக முதல்வராக பதவியேற்றார். எம்.ஆர்.ராதா தான் கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளார். தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தார். 1969ல் முதன்முறையாக தமிழக முதல்வர் ஆனார். இவர் சிறந்த படைப்பாளி. 75 படங்களுககு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.
எம்ஜிஆர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து சாதித்துள்ளார். கோடிக்கணக்கான ஏழை மக்களின் உள்ளங்களில் குடியிருந்தவர் தான் புரட்சித்திலகம் எம்ஜிஆர். அதனால் தான் அவர் அரசியலிலும் சாதிக்க முடிந்தது. படுக்கையில் இருந்தவாறே தேர்தலில் ஜெயித்துக்காட்டியவரும் இவர் தான். இவரது அரசியல் விஜயம் இன்று வரை பேசப்படும் வரலாறாகிவிட்டது.
1972ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார். 1977ல் தமிழக முதல்வர் ஆனார். தொடர்ந்து 10 ஆண்டுகள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். மக்களுக்காக பல நல்ல திட்டங்களைத் தீட்டினார். குறிப்பாக பள்ளி மாணவர்களுக்காக சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தினார். அவர் மறைந்தபிறகு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
ஜெயலலிதா
தமிழ்த்திரையுலகில் கொடி கட்டிப் பறந்த இவர் அரசியலிலும் சாதித்துக் காட்டினார். எம்ஜிஆருக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து அசத்தினார். அவரது கொள்கை வழி நின்று அரசியலிலும் தைரியமான பெண் என்ற பெயருடன் பல செயல்களை சாதித்துக் காட்டினார்.
எம்ஜிஆருக்குப் பின் அதிமுக கட்சிக்கு தலைமை தாங்கி 5 முறை தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ளார். முதன்முறையாக 1991ல் தமிழக முதல்வராக பதவி ஏற்றார். மக்களுக்கு இவர் அளித்த திட்டங்களில் முதன்மையானது தொட்டில் குழந்தை திட்டம்.
விஜயகாந்த்
தமிழ்த்திரை உலகினர் இவரை கருப்பு எம்ஜிஆர் என்றும் கேப்டன், புரட்சிக்கலைஞர் என்றும் செல்லமாக அழைத்து வருகின்றனர். இவர் சினிமாவைப் போல் அரசியலிலும் சாதித்தார். திராவிடக் கட்சிகளுக்குப் பின் ஒரு பெரிய கட்சி என்ற அளவில் தனது தேமுதிக (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) என்ற கட்சியை 2005ல் தொடங்கினார்.
2006ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிட்ட விருத்தாச்சலம் தொகுதியில் ஜெயித்து சட்டமன்ற உறுப்பினரானார். மற்ற தொகுதிகளில் இவரது வேட்பாளர்கள் தோல்வி அடைந்தார். 2011ல் நடந்த தேர்தலில் வலுவான எதிர்க்கட்சித் தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது. 2011ல் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சீமான்
நடிகர், இயக்குனர், அரசியல்வாதி என பன்முகத்திறன் கொண்டவர். ஈழத்தமிழருக்கு ஆதரவு கொடுப்பதில் ஈடு இணையற்றவர். 2010ல் நாம் தமிழர் என்ற கட்சியைத் தொடங்கி தமிழகத்தில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக்கொண்டார். நாம் தமிழர் கட்சி 2016ல் நடைபெற்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது.
ஆனால் ஒரு தொகுதி தவிர்த்து அனைத்திலும் தோல்வி அடைந்தது. 2016ல் நடைபெற்ற தேர்தலிலும் அனைத்துத் தொகுதிகளில் தோல்வி அடைந்தது. இருந்தாலும் அப்போது 7.3 சதவீதம் வாக்குகள் பெற்றது. 2021ல் நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தபோதும் 24.3 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது.
கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் சினிமாவில் பல அவதாரங்கள் எடுத்தவர். இதனால் தான் தனது படத்தின் பெயரையே தசாவதாரம் என்று வைத்தார். அதே போல் இப்போது அரசியலிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்து வருகிறார். 2018ல் மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். இவரது நண்பர் ரஜினிகாந்த் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில் இவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென கட்சியைத் தொடங்கினார்.
2021ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 142 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தினார். ஆனால் அனைத்திலும் தோல்வி தான் மிஞ்சியது. இருந்தாலும் பல தொகுதிகளில் இவரது வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தனர். கமல் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் 1728 வாக்குகள் வித்தியாசத்தில்தோல்வி அடைந்தார். தோல்வியைக் கண்டு துவளாமல் தொடர்ந்து கட்சியை வளர்த்து வருகிறார்.