தல, தளபதியுடன் போட்டி போடும் பொங்கல் ரிலீஸ் படங்கள் - ஒரு பார்வை
வழக்கமாக தமிழ்ப்படங்கள் தான் பொங்கலுக்கு அதிகளவில் ரிலீஸ் ஆகும். ஆனால் இந்தப் பொங்கலுக்கு தமிழில் இரண்டுமே பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால் போட்டிக்கான படங்கள் வரத் தயங்கி ரிலீஸாகாமல் உள்ளன.
இந்நிலையில் மற்ற மொழிப்படங்கள் வரிந்து கட்டிக் கொண்டு போட்டிப் போடத் தயாராக உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
வாரிசு
தளபதி விஜய் நடிப்பில் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு. விஜய், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். குடும்ப்பாங்கான கதை அம்சம் கொண்ட இந்தப் படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் உள்ளது.
200 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இந்தப்படத்தில் இடம்பெறும் ரஞ்சிதமே பாடல் இப்போதே செம ஹிட்டாகி உள்ளது. தெலுங்கிலும் இந்தப் படம் வெளியாகிறது. ஜன.12ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணிவு
அஜீத்தின் 61வது படம். டபுள் ஆக்ட். ஒருவர் மாஸ் ஹீரோ. இன்னொருவர் கொலைவெறி பிடிச்ச வில்லன். எச்.வினோத் இயக்கத்தில் படம் அதிரடியாகக் களமிறங்குகிறது. வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட கதை.
மஞ்சுவாரியார் இந்தப் படத்தில் நடித்தது படத்திற்குப் பிளஸ் பாயிண்ட். வலிமையில மிஸ் பண்ண மாதிரி இந்தப் படத்தைப் பண்ணாமல் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கணும்னு கடுமையாக உழைத்துள்ளார். ஜன.12ல் வெளியாகிறது.
ஆதிபுருஷ்
ராமாயணத்தை மையமாகக் கொண்ட கதை. ஓம் ரவுத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. பிரபாஸ், கிரிட்டி சனான், சயீப் அலி கான், சன்னி சிங்க் மற்றும் தேவட்டா நாகே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபாஸ் ராமனாகவும், சயீப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.
ஜன.12ல் வெளியாகிறது. ராமாயணத்தை ஒரு புதிய அனுபவத்துடன் நவீன தொழில்நுட்பத்துடன் காணத் தயாராகுங்கள். 550 கோடி செலவில் தயாராகி உள்ளது. இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகியுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளத்திலும் டப் செய்யப்படுகிறது.
வீரசிம்ஹா ரெட்டி
தெலுங்கு படம் இது. நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் பொங்கலுக்கு புயலென வெளியாகிறது. கோபிந்த் மல்லினேனி இயக்க, பாலகிருஷ்ணாவுடன் சுருதிஹாசன், வரலட்சுமி சரத்குமார், ஹனி ரோஸ் மற்றும் துனியா விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர்.
பொங்கல் ரிலீஸ் படமாக களம் இறங்குகிறது. டிரெய்லர் பட்டையைக் கிளப்புகிறது.
வால்டர் வீரய்யா
இதுவும் தெலுங்கு படம் தான். அங்குள்ள மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ளார். கே.எஸ்.ரவீந்திரா இயக்கியுள்ளார். ஹைதராபாத், விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
சிரஞ்சீவிக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். ரவிதேஜா, கேத்ரின் தெரசாவும் நடித்துள்ளனர். 100 கோடி மதிப்பில் வெளியாக உள்ள இந்தப்படம் வரும் ஜன.13ல் வெளியாகிறது.