Connect with us
ps2

latest news

காணாமல் போன அருள்மொழிவர்மன்!… சோழ ராஜ்ஜியத்தின் நிலை என்ன? – பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்…

போன வருடம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியான பொழுது மிகவும் ட்விஸ்ட்டான ஒரு கிளைமாக்ஸில் படம் முடிந்தது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சுறுசுறுப்பான கதை ஓட்டத்தை கொண்டுள்ளது. கண் இமைக்க நேரமின்றி கதை வேகமாக செல்கிறது. வந்திய தேவனும், அருள்மொழிவர்மனும் கடலில் இருந்து காப்பாற்றப்பட்ட பிறகு பாண்டியர்களிடமிருந்து சோழ ராஜ்ஜியத்தை காப்பாற்ற வத்திய தேவன், அருள்மொழிவர்மன், குந்தவை மற்றும் ஆதித்த கரிகாலன் ஆகியோர் எடுக்கும் முயற்சிகளை வைத்து படத்தின் கதை செல்கிறது.

ஆதித்த கரிகாலன்,நந்தினி இருவரின் இளமைக்கால காதல் கதையிலிருந்து இரண்டாம் பாகம் துவங்குகிறது. கடலில் விழுந்த அருள்மொழிவர்மன் இறந்துவிட்டார் என்று நினைத்த நந்தினி சோழர்களுக்கு எதிரான சதி திட்டத்தை தீட்டுகிறார். அதற்கு பாண்டிய ஆபத்து உதவிகள் உதவியாக இருக்கின்றனர். இந்த விஷயத்தை கண்டறியும் வந்திய தேவன் அதை மற்றவர்களுக்கு தெரிவிக்கிறார்

இதனால் கடம்பூர் மாளிகையில்தான் மொத்த சதி திட்டமும் நடக்கிறது என்பதை அறிந்த ஆதித்த கரிகாலன் அதை எதிர்க்க நேரடியாக கடம்பூர் மாளிகைக்கே செல்கிறார். கடம்பூர் மாளிகையில் என்ன நடக்கிறது?, பாண்டிய ஆபத்து உதவிகள் மற்றும் நந்தினி நிலை என்ன? இதற்கு நடுவே சுந்தர சோழருக்கு வரவிருக்கும் ஆபத்து என பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக படத்தின் கதை செல்கிறது.

ஆதித்த கரிகாலனின் கொலையை பொறுத்த வரை நாவலில் வருவது போலவே படத்திலும் அதை யார் செய்தார் என்பது விளக்கப்படவில்லை. அதே போல நாவலில் இல்லாத ஒரு காட்சியை படத்தின் இறுதியில் சேர்த்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

நடிப்பு: 

நடிப்பை பொறுத்தவரை இந்த படத்தில் கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் இவர்கள் நால்வருக்கும்தான் மிக முக்கியமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கார்த்தி, த்ரிஷா,ஐஸ்வர்யாராய்,விக்ரம் நால்வருமே மிகக் கச்சிதமாக நடித்துள்ளனர். அதிலும் நந்தினிக்கும் குந்தவைக்கும் இருக்கும் விரோத தன்மையை ஐஸ்வர்யாராயும் திரிஷாவும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

ஒளிப்பதிவு, இசை, இயக்கம்:

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தனது முழு திறமையையும் காட்டியுள்ளார். படத்தில் கலை இயக்குனர் தோட்டா தரணியின் பங்கு மிகவும் முக்கியமானது. படத்தில் வரும் கோட்டைகள் நடிகர்கள் உடுத்தும் ஆடைகள் என அனைத்தையும் சோழர் காலத்திற்கு ஏற்ப உருவாக்கி மிகவும் நுட்பமாக பணிபுரிந்திருந்தார் தோட்டா தரணி.

படம் முடியும் வரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த காலகட்டத்திற்குள் கொண்டு இருப்பது போன்ற மனநிலையை படக்குழு உருவாக்கியுள்ளது.

ஏ ஆர் ரகுமானும் கடந்த பாகத்தைப் போலவே இந்த பாகத்திலும் நேர்த்தியான இசையை கொடுத்துள்ளார் அதிலும் படத்தில் விறுவிறுப்பான இடங்களில் அதற்கு தகுந்தார் போல இசையை இசையமைத்துள்ளார். 

இந்த படத்தை இரண்டே முக்கால் மணி நேரத்தில் முடிப்பது என்பது மணிரத்னத்திற்கு மிகவும் சவாலான காரியமாக இருந்துள்ளது. ஏனெனில் படத்தில் அவ்வளவு கதாபாத்திரங்கள் இருக்கின்றனர். ஆனாலும் கதையை புரியும்படி விறு விறுப்பாக கொண்டு சென்று படத்தை முடித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். பெரும் வி.எஃப்.எக்ஸ் எதுவும் இல்லாமல் காட்சிகள் மூலமே மக்களை வியப்பில் ஆழ்த்தும் சூட்சிமம் தெரிந்து படத்தை இயக்கியுள்ளார் மணிரத்னம்.

குறைகள்:

  • படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் பொன்னியின் செல்வன் நாவலில் உள்ளது போலவே இருந்திருக்கலாம் என ரசிகர்கள் சிலர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
  • அதே போல நாவலை பொறுத்தவரை இரண்டாம் பாதியில் அருள் மொழி வர்மனுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கும். ஆனால் படத்தில் இரண்டு பாகங்களிலுமே அருள்மொழிவர்மனுக்கு அதிக காட்சிகள் இல்லாதது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் உள்ளது. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. எனவே முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அதிக ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in latest news

To Top