செம கவர்ச்சி விருந்து... குடும்பத்தோட பார்க்க வேண்டிய படம் என்ன குழப்புகிறார் பயில்வான்
பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றி பல்வேறு தரப்பினரும் பல்வேறு விமர்சகங்கள் கூறி வருகின்றனர். படத்தைப் பற்றி பெரும்பாலும் பாசிட்டிவான விமர்சனங்களே வந்து கொண்டு இருக்கிறது. தற்போது பயில்வான் ரங்கநாதன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா....
நெஞ்சம் கவர்ந்த தமிழ் பேரரசர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவல் இது. ஒரு நாவலைப் படமாக்கும்போது எதை விடுவது, எதை சேர்ப்பது என்ற குழப்பம் கண்டிப்பாக இயக்குனருக்கு வரத்தான் செய்யும். ஆனால் அதையும் மீறி பல ஆண்டுகளாக இரவும் பகலும் உழைத்து மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி இருக்கிறார்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஐஜஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, மற்றும் பலர் நடித்து இருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டா தரணி கலை அரங்குகளை பிரம்மாண்டமாக அமைத்து இருக்கிறார்.
இளம்புயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார். திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பவர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருக்கிறது.
சோழப்பேரரசுகளுக்குள் ஏற்படுகின்ற கருத்து மோதல். அண்ணன் வீரமில்லாதவன். வாள் பிடிக்கத் தெரியாதவன். ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டவன் என்ற காரணத்திற்காக மூத்தவன் ரகுமானைப் புறந்தள்ளி இளையவனுக்கு முடிசூட்ட முயற்சிக்கிறார் சோழப்பேரரசர்.
ஆனால் அவருடைய மதிமந்திரி பழவேட்டறையர் சரத்குமார் இல்லை முறைப்படி மூத்தவர் தான் பதவி ஏற்க வேண்டும் என்று சொல்கிறார். இதற்கு சோழனுடைய தங்கையும் குதர்க்கமாகப் பேசுகிறார்.
அதேபோல பழவேட்டரையரோட மனைவி ஐஸ்வர்யாராயும் ஒருவரைக் காதலித்து பழவேட்டரய்யரைத் திருமணம் செய்து கொள்கிறார். திரிஷா திருமணம் ஆகாமலே இருக்கிறார். யாரைக் காதலிக்கிறார்? யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதே தெரியவில்லை. இப்படிப்பட்ட நிறைய பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது
சரத்குமார் பழவேட்டரையராக நடித்து இருக்கிறார். அவர் கொஞ்சம் வில்லன் மாதிரி தெரியும். அந்தக் கம்பீரமான உடலுக்கு சோகத்தையும் பழிவாங்குதலையும் வெளிப்படுத்தியிருக்கிறார். முக்கிய வேடம் யார் என்றால் கார்த்தி தான். கதாநாயகனுக்குரிய அத்தனை அம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளார். வந்தியத்தேவனாக வரும் அவர் படத்தில் கலக்கியுள்ளார்.
ஆழ்வார்க்கடியான் என்ற வைணவப் பெரியவருடன் சண்டை போடுகிறார். காமெடி பண்ணுகிறார். எல்லா பெண்களையும் இவரை விரும்புகின்றனர். இவரும் விரும்புகிறார். திரிஷாவின் பார்வையிலும் காதல் தெரிகிறது. நந்தினியிடமும் காதல் ஏக்கம் தெரிகிறது. ஐஸ்வர்யாவும் கார்த்தியை பார்க்கும்போது ஒரு மாதிரியாகத் தான் பார்க்கிறார்.
கலகலப்பூட்டுபவரே கார்த்தி தான். மற்றவர்கள் எல்லாம் போர், பழிக்குப்பழி என்று தான் திரிகிறார்கள். இந்தப்படத்தில் ரகுமான் மூத்த சோழ இளவரசராக நடித்து இருக்கிறார். அடக்கி வாசித்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் அம்மாவையே எதிர்த்துப் பேசுகிறார். ஜெயசித்ரா ராஜ்ஜியத்துடைய அரசியார்.
அரசியார் சொல்கிறார் தம்பி தான் வீரமுள்ளவன். விவேகமுள்ளவன். உனக்கு அரசாங்கத்தை ஆள்கிற தகுதியில்லை. நீ ஆன்மிகவாதின்னு சொன்னதும் அப்படி ருத்திராட்சத்தை அறுத்துப் போட்டுட்டுப் போறாரு ரகுமான். அந்தக்காட்சி எல்லாம் பளிச் சென்று இருக்கிறது.
இந்தப்படத்துல சோழ அரசியாக வருகிற ஜெயசித்ரா ஒரே காட்சியில் வந்தாலும் மனதில் நிற்கிறார். திரிஷா அந்தப்பார்வையிலேயே மிடுக்கு, ஆணவம், கர்வம் எல்லாம் இருக்கு. ஐஸ்வர்யாவும், திரிஷாவும் சந்தித்துக் கொள்கிற காட்சிகள் எல்லாமே நீயா நானா என்ற விவாதத்திற்குரியது.
ஐஸ்வர்யா பார்க்கிற பார்வைக்கு எதிர்பார்வை வீசுகிறார் திரிஷா. ஆனால் ஐஸ்வர்யா அந்த சோகம் கலந்த விரக்தி, காமம் எல்லாம் இருப்பதால் அவருக்கு முதல் மதிப்பெண் கிடைக்கிறது. திரிஷா தன்னோட தோற்றம், கவர்ச்சியில் முன்னணியில் நிற்கிறார். அண்ணனையே எதிர்த்துப் பேசுகிறார். இந்தப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி பிரமாதமாக நடித்திருக்கிறார். படத்தில் நடித்த 5 பெண்களுமே சிறப்பாக கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார்கள்.
மலையாள, கன்னட நடிகர்களும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு பாராட்டப்பட வேண்டிய விஷயம். ரவிவர்மன். வண்ண ஓவியங்களை வரைவதில் முதலிடம் பெற்றவர் ரவி வர்மன். அதே போல இந்த ரவிவர்மன் ஒளிப்பதிவில் வண்ணக்கோலங்களாகக் கண்களை அகல விரித்துப் பார்க்க வைத்திருக்கிறார். பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
இந்தப்படத்தில் அரங்குகளை வித்தியாசமாகவும், புதுமையாகவும் பார்ப்பதற்கு மிரட்சியாகவும் வடிவமைத்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். மெலோடியின் சொந்தக்காரர். வீராவேசமாக பாடல்கள் இல்லை.
ரசிகர்களுக்கு ஏற்ப போட்டு இருக்கிறார்.
தமிழ் இசைக்கருவிகள் ஏ.ஆர்.ரகுமானுக்குத் தெரியவில்லையா என்று கேட்க வேண்டும். நடன மங்கைகள் அழகாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பெண்களையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
ஜெயமோகன் அழகாக தமிழ் நடையில் வசனங்கள் எழுதியிருக்கிறார். வசனங்களை விட கேமராவின் மூலம் நமக்குப் புரிய வைத்து இருக்கிறார் மணிரத்னம். இவர் படம் என்றாலே வசனம் குறைவாகத் தான் இருக்கும். அதை இந்தப்படத்திலும் செய்திருக்கிறார்.
இந்தப் படம். எல்லா ராஜ்யத்திலும் பெண்களின் குறுக்கீடு உள்ளது என்பதை இந்தப்படத்திலும் சொல்லியிருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் பிரம்மாண்டத்தின் உச்சம். சோழர்காலத்தில் ராஜாக்களின் பெருமையைப் பாருங்கள் என்று யாரும் சொல்ல முடியாது.
சோழ ராணிகளின் கற்பை பாருங்கள் என்று சொல்ல முடியாத அவலநிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம். கதை அப்படி. அதனால் யாரையும் குறை சொல்ல முடியாது.