சினிமாவில் பல முறை ரெட் கார்டு வாங்கிய ஒரே வில்லன் நடிகர்… இவருக்கு இப்படியும் ஒரு கதை இருக்கா??
சினிமா உலகில் தொடக்கத்தில் வில்லனாக அறிமுகமாகி, குணச்சித்திர நடிகர், ஹீரோ, காமெடி என பன்முகங்களாக கலக்கி வருபவர் பிரகாஷ் ராஜ். தனது அசாதாரண நடிப்பால் மக்களின் மனதில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் பிரகாஷ் ராஜ்.
கே.பாலச்சந்தர்
பிரகாஷ் ராஜ்ஜின் இயற்பெயர் பிரகாஷ் ராய். இவர் தனது சினிமா பயணத்தின் தொடக்கத்தில் கன்னட மொழியில் “ராமாச்சாரி”, “மல்லிகே ஹூவே” போன்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரது சிறப்பான நடிப்பை பார்த்த கீதா என்ற பிரபல நடிகை, கே.பாலச்சந்தரிடம் பிரகாஷ் ராய்யை அறிமுகப்படுத்தி வைத்தார். பிரகாஷ் ராய்யின் நடித்துவமான நடிப்பை பார்த்த பாலச்சந்தர், தான் இயக்கிய “டூயட்” என்ற திரைப்படத்தில் பிரகாஷ் ராய்யை, பிரகாஷ் ராஜ் என அறிமுகப்படுத்தினார்.
பன்முக கலைஞன்
இதனை தொடர்ந்து தமிழின் பல திரைப்படங்களில் டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தார் பிரகாஷ் ராஜ். அதே போல் “தயா”, “உன் சமையல் அறையில்” போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். மேலும் “மொழி”, “அபியும் நானும்” போன்ற பல திரைப்படங்களில் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களை கொள்ளைகொண்டார். மேலும் “கண்ட நாள் முதல்”, “பொய்”, “வெள்ளித்திரை” போன்ற பல திரைப்படங்களை தனது டூயட் மூவீஸ் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார்.
விருதுகள்
பிரகாஷ் ராஜ் தன்னுடைய சினிமா பயணத்தில் எண்ணிலடங்கா விருதுகளுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தவர். குறிப்பாக 5 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் 8 முறை தமிழக விருதுகளை பெற்றுள்ளார். அதே போல் 5 முறை ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
அரசியல்
பிரகாஷ் ராஜ் தொடக்கத்தில் அரசியலின் மேல் அதிக ஈடுபாடு இல்லாமல் இருந்தார். ஆனால் அவரின் நண்பரும் பத்திரிக்கையாளருமான கௌரி லங்கேஷ் சுடப்பட்ட சம்பவம் பிரகாஷ் ராஜ்ஜை உலுக்கிப்போட்டது. இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.
2000 நாடகங்கள்
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ், சினிமாத்துறையில் கால் எடுத்து வைப்பதற்கு முன்பு கர்நாடகா கலாச்சேத்ராவில் நாடக கலைஞராக திகழ்ந்தாராம். கிட்டத்தட்ட 2000 தெரு நாடகங்களில் பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். அப்போது அவருக்கு சம்பளம் வெறும் 300 ரூபாய்தானாம்.
ரெட் கார்டு
தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்களால் கிட்டத்தட்ட 6 முறை ரெட் காட்டு போடப்பட்ட ஒரே நடிகராக திகழ்பவர் பிரகாஷ் ராஜ்தான். பிரகாஷ் ராஜ் படப்பிடிப்பிற்கு தாமதமாக வருகிறார் என்ற காரணத்தால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னால் வேறு ஒரு அரசியல் இருப்பதாக கூறுகிறார்கள்.
அதாவது பிரகாஷ் ராஜ்ஜின் வளர்ச்சியை ஜீரணித்துக்கொள்ள முடியாத சில தெலுங்கு நடிகர்கள், அவரின் வளர்ச்சியை தடுப்பதற்காக அவர்களின் செல்வாக்கை பயன்படுத்தி பிரகாஷ் ராஜ்ஜிற்கு ரெட் கார்டு கொடுக்க வைத்தார்கள் என்றும் சில தகவல்கள் கூறிகின்றன.