மீண்டும் விஜய்யுடன் மோத வரும் முத்துப்பாண்டி.... வெளியான மாஸ் அப்டேட்.....
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு பொங்கல் அல்லது கோடை விடுமுறையை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது.
விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளதும், இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இருப்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இப்படத்தின் பூஜை ஆயுத பூஜையை முன்னிட்டு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக பிரபல தெலுங்கு நடிகர் நானி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பிரகாஷ் ராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் மற்றும் பிரகாஷ் ராஜ் கூட்டணியில் கில்லி, சிவகாசி, போக்கிரி, வில்லு என பல படங்கள் வெளியாகி இருந்தாலும் ரசிகர்களால் மறக்க முடியாத படம் என்றால் அது கில்லி படம் தான். இப்படத்தில் முத்துப்பாண்டியாக பிரகாஷ் ராஜ் நடிப்பில் மிரட்டி இருப்பார். அதன் பிறகு எத்தனை படங்கள் வந்திருந்தாலும் கில்லி படம் மட்டுமே இன்றுவரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது.
ஒருவேளை தளபதி 66 படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பது உறுதியானால் சுமார் 11 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு மாஸான ஹீரோ - வில்லன் காம்பினேஷன் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். நிச்சயம் இந்த கூட்டணியில் ஒரு வெற்றி படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.