இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!.. சூர்யாவின் புது படத்துக்கு வரப்போகும் சிக்கல்...

கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடிக்கிடந்த போது தியேட்டர் அதிபர்களின் எதிர்ப்பையும் மீறி தனது சூரரைப்போற்று திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியிட்டு ஓடிடி கலாச்சாரத்தை துவங்கி வைத்தவர் சூர்யா. எனவே, சூர்யா நடிக்கும் திரைப்படங்களை தியேட்டரில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் போர்க்கொடி தூக்கினர். ஆனாலும், அவர் கண்டு கொள்ளவில்லை. அவருக்கு பின் பல புது படங்கள் ஓடிடியில் வெளியானது. தற்போதும் வெளியாகி வருகிறது.
சூரரைப்போற்று மட்டுமல்ல. தனது தயாரிப்பில் உருவாகிய 4 படங்கள் தொடர்ச்சியாக அமேசான் பிரைமில் வெளியாகும் எனக்கூறி தியேட்டர் அதிபர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் சூர்யா. ஏற்கனவே உடன் பிறப்பே மற்றும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் என 2 படங்கள் வெளியாகி விட்டது. நேற்று இரவு ஜெய்பீம் வெளியானது. இதில் சூர்யாவே நடித்துள்ளார். இப்படமும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று தியேட்டரில் வெளியாகவுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். எனவே, இப்படத்திற்கு எப்படியாவது பிரச்சனையை கிளப்ப வேண்டும் என தியேட்டர் அதிபர்களும் வினியோகஸ்தர்களும் திட்டம் தீட்டி வருகிறார்களாம். ஆனால், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ். இப்படத்தை வெளியிடப்போவது உதயநிதியின் ரெட் ஜெயண்ட்.
எனவே, படம் வருவதை தடுக்க முடியாது. எனவே, திமுக ஆட்சியில் அவர்களின் உறவினர்கள் கையில் சினிமா சிக்கியிருப்பது போல் ஒரு தோற்றத்தை எதிர்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக, சீமான் போன்றோர் மூலம் உருவாக்க திட்டமிட்டு வருகிறார்களாம்.
இந்த செய்தி பிரபல வலைப்பேச்சு யுடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.