படம் பார்த்ததுனால வந்த கண்ணீர் இல்ல… படம் எடுத்ததுனால வந்த கண்ணீர்!! சோகத்தையே காமெடியாக சொன்ன பிரபல தயாரிப்பாளர்…

Karthik
சில படங்களை பார்க்கும்போது நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி கண்ணீர் விட்டு அழ வைத்துவிடும். ஆனால் சில படங்களை பார்க்கும்போது “ஏன்தான் இந்த படத்தை” பார்த்தோம் என்று கண்ணீர் விட வைத்துவிடும். சினிமா ரசிகர்கள் காலம் காலமாக இந்த இரு உணர்வுகளையும் கடந்து வந்துகொண்டுத்தான் இருக்கிறார்கள்.
ஆனால் தயாரிப்பாளர்களை பொறுத்தவரை அவர்களின் நிலையே வேறு. ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்காக அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் ஒரு நேயர் “உங்களுடைய தயாரிப்பில் வெளிவந்து உங்களை அறியாமலேயே கண்ணிர் வரவைத்த படம் எது என்று சொல்லமுடியுமா?” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

Chitra Lakshmanan
அதற்கு அவர் அளித்த பதில் என்ன தெரியுமா??
“என்னுடைய தயாரிப்பில் வெளிவந்த படங்களிலேயே என்னை கண்கலங்க வைத்த படங்கள் என்றால் இரண்டு படங்களை சொல்லலாம். முதலாவது சிவாஜி கணேசனை வைத்து நான் தயாரித்த வாழ்க்கை திரைப்படம். இந்த படத்தில் உணர்ச்சிகரமான பல காட்சிகள் இருந்தன.

Vaazhkai
அந்த உணர்ச்சிவயமான காட்சிகளுக்கு தனது நடிப்பாற்றலால் மேலும் மெருகேற்றினார் சிவாஜி கணேசன். அதன் காரணமாகத்தான் அந்த படத்தை பார்க்கும்போது என்னை அறியாமலே நான் கண் கலங்கினேன்” என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: படம் வெளியான பின்பும் படப்பிடிப்பு நடத்திய சத்யராஜ் பட இயக்குனர்… இது ரொம்ப புதுசா இருக்கே!!

Chinna Raja
மேலும் பேசிய அவர் “என்னை கண்கலங்கவைத்த இரண்டாவது திரைப்படம் நான் கார்த்திக்கை வைத்து தயாரித்த சின்ன ராஜா திரைப்படம். இத்திரைப்படத்தை பார்த்தபோது அல்ல, இந்த படத்தை தயாரித்தபோது என்னை அறியாமல் கண்ணீர் வந்தது. அதை தயாரிக்கும்போது நான் பட்ட கஷ்டங்கள் இருக்கிறதே அதெல்லாம் சொல்லி மாளாது. அந்த கஷ்டத்திற்கு கதாநாயகனுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அவர் பல நாட்கள் படப்பிடிப்பிற்கு வராத காரணத்தினால் பல நாட்கள் அந்த படத்தின் தயாரிப்பின்போது கண்கலங்கியிருக்கிறேன்” என தனது வேதனையையும் நகைச்சுவை தொனியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.