Cinema History
நமக்கு சோறு போட்டவருக்கா இந்த நிலைமை?.. இயக்குனரின் நிலை கண்டு கண்கலங்கிய தயாரிப்பாளர்
சினிமா என்பது ஒரு கனவுலகம் என்று சும்மா சொல்லவில்லை. இது கீழே உள்ளவரை மேலேயும் கொண்டு வரும். மேலே உள்ளவரைக் கீழேயும் கொண்டு வரும். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைப் பார்ப்போமா….
டிஆர் மகாலிங்கமும், எம்ஏ.ராஜம்மாவும் நடித்த படம் தான் ஞானசௌந்தரி. இது மிகப்பெரிய வெற்றிப்படம். இந்தப் படத்தை இயக்கியவர் எஃப்.நாகூர். மீரா போன்ற புராண படங்களுக்கு எல்லாம் மிக பிரம்மாண்டமான செட்டுகளை அமைத்தவர் தான் இந்த நாகூர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் முதலாக தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளரான ஜெனோவா படத்தை இயக்கியவரும் நாகூர் தான். இந்தப் படத்தின் கதாநாயகன் எம்ஜிஆர்.
இந்த நாகூர் கிட்ட ஒரு காலத்தில் ஆபீஸ் பாயாக இருந்தவர் தான் படத்தயாரிப்பாளர் மின்னல். ஆபீஸ் பாயாக இருந்த இவர் ஒரு விளம்பர நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பிறகு தயாரிப்பாளர் ஆனார். அவருக்கு தமிழ் சினிமா உலகின் எல்லா கலைஞர்களையும் நன்கு தெரியும். மிகுந்த செல்வாக்கு பெற்றவர்.
அந்தக் காலகட்டத்தில் கோடம்பாக்கத்தில் இவர் ஒருநாள் காரில் சென்றார். அப்போது நாகூர் நடந்து போவதைப் பார்த்தார். அவரைப் பார்த்த உடன் இவருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. தனக்கு வந்து சோறு போட்ட முதலாளி இப்படி நடந்து போயிக்கிட்டு இருக்காரேன்னு அவரைத் தன் காரில் ஏற்றிக் கொண்டார்.
அவரைப் பார்த்ததும் நாகூருக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. நான் உன்னைப் பார்க்கத் தான்பா வந்துக்கிட்டு இருக்கேன். என்னோட பையனுக்கு கல்லூரி பீஸ் கட்டணும். உங்கிட்ட கேட்டு வாங்கி கட்டலாம்னு வந்தேன் என்றார். அப்போது அவரையும் அறியாமல் மின்னல் கண்களில் கண்ணீர் சுரந்தது. நாகூர் இயக்குனர் மட்டுமல்ல. நெப்டியூன் ஸ்டூடியோவின் பங்குதாரர். அது மட்டுமல்லாமல் பல படங்களைத் தயாரித்தவர். அப்படிப்பட்டவருக்கா இப்படி ஒரு நிலை என கலங்கிப் போனார் மின்னல்.
மேற்கண்ட தகவலை பிரபல சினிமா விமர்சகர் சித்ரா லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.