இதுக்கெல்லாம் கமிஷன் அடிச்சா சினிமா எப்படி விளங்கும்!.. அட்லியை பொளந்துகட்டிய கே.ராஜன்...
சினிமா துவங்கிய போது அது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் கையில் இருந்து. ஒரு படத்திற்கு தயாரிப்பாளர்தான் முதலாளி. அவரின் முடிவே இறுதியானது. ஆனால், எம்.ஜி.ஆர் போன்ற நடிகரின் படங்கள் எப்போது அவருக்காகவே ஓட துவங்கியதோ அப்போதே அது நடிகர்களின் கைகளுக்கு சென்றது. அவர் சொல்பவரே தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள், நடிகை என முடிவு செய்யப்பட்டது.
இப்போதெல்லாம் ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள் தயாரிப்பாளர்கள் யார் என அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். அவர்களுக்கு ரூ.100 கோடி சம்பளம் கொடுக்க திராணி இருப்பவர்தான் தயாரிப்பாளர். இதனால்தான் லைக்கா, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட், சன் பிக்சர்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்கும் நிலை இருக்கிறது. ஒருபக்கம் அட்லீ போன்ற இயக்குனர்கள் தயாரிப்பாளர்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கூறிய பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்து தயாரிப்பாளர்களை காலி செய்கிறார்கள்.
இதுபற்றி தொடர்ந்து பேசி வருபவர் தயாரிப்பாளர் கே.ராஜன். சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய கே.ராஜன் ‘பிகில் படம் பெரிய படம் என்கிறார்கள். எந்த படம் வெற்றி பெறுகிறதோ அதுவே பெரிய படம். அப்படி பார்த்தால் பிகில் ஒரு தோல்விப்படம். ஏஜிஎஸ் நிறுவனம் என்பதால் அட்லீ செய்த செலவை தாக்கு பிடித்தார்கள்.
ஷாருக்கான் நடித்த சக்தே இண்டியா படத்தை உல்ட்டா செய்து அப்படத்தை எடுத்தார் அட்லீ. சக்தே இண்டியா படத்தில் இருந்த நேர்மை இந்த படத்தில் இருக்காது. பிகில் படத்தில் 5 ஆயிரம் துணை நடிகைகளை கொண்டு வந்து காட்சிகளை எடுத்தார். அதோடு, பல கோடிகளில் சம்பளம் வாங்குவதும் மட்டுமில்லாமல், அந்த துணை நடிகைகளுக்கான சம்பளத்திலும் 10 சதவீதம் அவருக்கு சென்றது. இப்படி செய்தால் சினிமா எப்படி விளங்கும்?’ என ராஜன் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆருடன் ஜெய்சங்கருக்கு ஏற்பட்ட கருத்து மோதல்… எல்லாம் அந்த ஒரு படத்தால் வந்ததுதான்!