Cinema History
அமெரிக்காவிலும் எம்.ஜி.ஆர் புகழ்!. அசந்துபோன ராதாரவி.. அவரே பகிர்ந்த சம்பவம்!…
தமிழ் நாடக நடிகர், சினிமா நடிகர் என்பதுதான் எம்.ஜி.ஆரின் துவக்கமாக இருந்தது. ஆனால், மெல்ல மெல்ல உயர்ந்து பெரிய நடிகராக மாறி சினிமாவையே ஆண்டவர். இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் வெற்றி என்றே சொல்லலாம். ஏழைகளுக்கு உதவுவதே போலவே நடித்த எம்.ஜி.ஆர் அதன் மூலம் தமிழகத்தின் முதலமைச்சராகவும் மாறினார். தொடர்ந்து மூன்று முறை முதல்வராகவும் இருந்தார்.
அவரின் புகழ் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும், அவ்வளவு ஏன்? உலகம் முழுவதும் பரவியிருந்தது. ஏனெனில், அப்போது நடிகராக இருந்து ஒரு நாட்டின் முதலமைச்சர் ஆனவர் எம்.ஜி.ஆர் மட்டுமே. அவரை பற்றியும், அவர் மீது மக்கள் வைத்திருக்கும் அளவில்லா பாசம் பற்றியும் மற்ற நாட்டு தலைவர்களும் அறிந்து ஆச்சர்யப்பட்ட காலம் அது. எனவே, எம்.ஜி.ஆருக்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருந்தனர்.
சரி விஷயத்திற்கு வருவோம். நடிகர் ராதாரவி ஒருமுறை அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். ஒரு பேருந்தில் அவரை அழைத்து சென்றனர். அந்த பேருந்தில் பல நாட்டு பயணிகளும் அமர்ந்திருந்தனர். பேருந்தில் இருந்த டூரிஸ் கெய்ட் ஒவ்வொரு இடத்தை பற்றியும் மைக்கில் சொல்லிகொண்டே வந்தார். பல இடங்களுக்கும் பேருந்து சென்றது. ஒரு இடத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது அந்த டூரிஸ்ட் கெய்ட் ‘இங்கே பாருங்கள். இது உலக புகழ் பெற்ற புரூக்ளின் மருத்துவமனை. இங்கேதான் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்’ என சொன்னபோது ராதாரவிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லையாம்.
பல நாட்டை சேர்ந்த பெரிய மனிதர்கள் இங்கே சிகிச்சை எடுத்திருப்பார்கள். ஆனால், இவரோ எம்.ஜி.ஆரை சொல்கிறார். எம்.ஜி.ஆர் எவ்வளவு பெரிய உலக தலைவராக இருந்திருக்கிறார் என நினைத்து புல்லரித்து போய்விட்டதாம். அதோடு, ‘அந்த மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் இருந்தபோது ஒரு தனி அறையை உருவாக்கினார்கள். எதற்கு தெரியுமா?. எம்.ஜி.ஆர் குணமடைய வேண்டும் என தினமும் வரும் பூச்செண்டுகளை வைப்பதற்கு’ என அந்த டூரிஸ்ட் கெய்ட் சொல்ல வாயடைத்து போனாராம் ராதாரவி.
ராதாரவியின் அப்பாவும், நடிகருமான நடிகவேள் எம்.ஆர்.ராதா கோபத்தில் எம்.ஜி.ஆரை சுட்டு சில வருடங்கள் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.