ஜெய்பீம் ராசாக்கண்ணு மனைவிக்கு உதவி...ராகவா லாரன்ஸுக்கு ரொம்ப பெரிய மனசு!..
பத்திரிக்கையாளர் ஞானவேல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை சூர்யா நடித்ததோடு தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார்.
விழுப்புரம் அருகே வாழும் இருளர் சமூகத்தினர் சந்தித்த ஒரு பிரச்சனையையும், அவர்களுக்காக வழக்கறிஞர் சந்துரு (பின்னாளில் நீதிபதி சந்துரு) என்பவர் எப்படி போராடி நியாயம் பெற்று தந்தார் என்கிற உண்மை கதையை திரைக்கதை ஆக்கியுள்ளனர்.
அதாவது 1995ம் ஆண்டு இருளர் இனத்தை சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் மீது பொய் வழக்கு போட்ட போலீசார் அவரை காவல் நிலையத்தில் அடித்தே கொன்றனர். அவரின் கதையைத்தான் திரைப்படமாக எடுத்துள்ளார் சூர்யா. ராஜாக்கண்ணு மனைவி செங்கணி கதாபாத்திரத்தில் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்த லிஜோமல் ஜோஸ் நடித்திருந்தார். கர்ப்பிணியாக காவல் நிலையத்தில் அடி வாங்குவதும், தனது கணவரை தேடி அலைபவருமாக அவரின் கதாபாத்திரம் பலருக்கும் கண்ணீரை வரவழைத்தது.
இப்படம் பார்த்த பலருக்கும் நிஜமான செங்கணி இப்போது எங்கே இருக்கிறார் எனெ தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. பல ஊடகங்கள் அவரை தேடி அலைந்தன. ஆனால் அவரோ மீண்டும் போலீசாரால் தனக்கு பிரச்சனை வந்துவிடுமோ என்கிற பயத்தில் ஓடி ஒளிந்தார். ஆனால், பிரபல வலைப்பேச்சு யுடியூப் சேனல் அவரை நேரில் சந்தித்து பேட்டி எடுத்துள்ளது. அதன் மூலம் தற்போதும் அவர் ஏழ்மையுடன் தவித்து வருவதும், வசிக்க வீடில்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவருக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டி தர நடிகர் ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார். மேலும், 28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூர்மான நிகழ்வை தமிழகத்தில் பேசுபொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.