திடீரென பாதிரியாராக மாறிய ரகுவரன்… ஸ்தம்பித்துப்போன ரசிகர்கள்… இப்படி எல்லாம் நடந்துருக்கா?
தமிழ் சினிமா தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இப்போது வரை பீ.எஸ்.வீரப்பா, நம்பியார், பிரகாஷ் ராஜ், நாசர் போன்ற பலரையும் தனித்துவமான வில்லன் நடிகராக பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு ஸ்டைலிஷ் வில்லானாக திகழ்ந்து வந்தவர்தான் ரகுவரன்.
இவரின் உருவம் தமிழ் சினிமா வில்லன் என்ற டெம்ப்ளேட்டிற்குள் அடங்காத ஒன்று. ஆனால் அப்படியும் தனது வில்லத்தனமான ரியாக்சனாலும் உடல்மொழியாலும் டெரர் காட்டியவர் ரகுவரன். இவரின் குரல் இவருக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. கமல்ஹாசன் நீங்கலாக ரஜினி, அஜித், விஜய், விஜயகாந்த், பிரபு தேவா போன்ற பல நடிகர்களுக்கு சரிசமமான வில்லனாக வலம் வந்தவர் ரகுவரன்.
நிஜ வாழ்விலும் கதாப்பாத்திரமாகவே வாழ்வார்
ரகுவரன் குறித்து அவரது முன்னாள் மனைவியான ரோகினி ஒரு முக்கியமான விஷயத்தை பல பேட்டிகளில் கூறியுள்ளார். அதாவது ரகுவரன் ஒரு திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தார் என்றால் அந்த கதாப்பாத்திரம் எந்த குணாதிசயத்தில் இருக்குமோ அதுவாகவே மாறிப்போவார் என்பதுதான்.
இது எந்த அளவுக்கு என்றால், ஒரு கொடூர வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்றால் அவர் அந்த படத்தில் நடித்து முடிக்கும் வரை அவரது வீட்டிலேயும் அப்படியே நடந்துகொள்வாராம். அதே போல் ஒரு அன்பான குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்றால் அந்த கதாப்பாத்திரத்தில் நடித்து முடிக்கும் வரை அந்த குணாதிசயத்தோடு நிஜ வாழ்விலும் இருப்பாராம்.
பாதிரியாரான ரகுவரன்
இந்த நிலையில் இந்த குணாதிசயத்தால் ரகுவரன் செய்த பகீர் காரியத்தை குறித்த ஒரு தகவலை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதாவது ரகுவரன் ஒரு மலையாளத் திரைப்படத்தில் பாதிரியாராக நடித்துக்கொண்டிருந்தாராம். அந்த படத்தில் ஒரு வாரம் நடித்துமுடித்துவிட்டு கேரளாவில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறியிருக்கிறார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கிய ரகுவரனை பார்த்து அங்கிருந்தவர்கள் ஷாக் ஆகிவிட்டார்களாம்.
பாதிரியார் உடையிலேயே வந்திறங்கியிருக்கிறார் ரகுவரன். அவரை அழைத்துச் செல்ல வந்த அவரது மேனேஜர், “என்ன சார் இப்படி வந்துருக்குறீங்க” என கேட்க அப்போதுதான் ரகுவரனுக்கு நினைவே வந்ததாம். “நான் அந்த கதாப்பாத்திரத்திலேயே மூழ்கிவிட்டேன். அந்த நியாபகத்தில் அப்படியே ரயில் ஏறி வந்துவிட்டேன்” என கூறினாராம். இந்தளவுக்கு ஒரு ஆத்மார்த்தமான நடிகராக ரகுவரன் இருந்திருக்கிறார்.
இதையும் படிங்க: கடைசி நிமிஷத்தில் கைவிட்ட தயாரிப்பாளர்… ஓடி வந்து கைக்கொடுத்த ஜெய்சங்கர்… என்ன மனிஷன்யா!