அதிகம் தெரியாத பாலச்சந்தரின் ஆஸ்தான கேமரா மேன் ரகுநாதரெட்டி

1960களில் தன் திரைப்பயணத்தை தொடங்கி கடந்த 2014ம் ஆண்டு வரை பல சாதனைகளை செய்தவர் இயக்குனர் சிகரம் என அழைக்கப்படும் கே. பாலச்சந்தர் அவர்கள்.

ஒரு இயக்குனர் ஒரே கேமராமேனை தனது 99 சதவீத படங்களுக்கு பயன்படுத்தியுள்ளார் என்பது ஆச்சரியமான விசயம்தான்.

கலாகேந்திரா, பிரேமாலயா, கவிதாலயா என்று பல தயாரிப்பு நிறுவனங்களை ஆரம்பத்தில் இருந்து துவங்கி பல வெற்றிப்படங்களை தயாரித்து இயக்கியவர் பாலச்சந்தர். இறுதியில் கவிதாலயா நிறுவனமே பெரிய அளவில் சக்சஸ் செய்தது.

பாலச்சந்தர் தயாரித்து இயக்கிய மூன்று நிறுவனங்களிலும் அனைத்து பெரும்பாலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ரகுநாதரெட்டி.

1964ல் சினிமாவுக்கு வந்த ரகுநாதரெட்டி அந்தக்கால மிகப்பெரும் ஒளிப்பதிவாளர் பி.எஸ் லோக்நாத்திடம் அசிஸ்டண்டாக வாழ்க்கையை தொடங்கினார்.

அவர் ஒளிப்பதிவு செய்த திக்கு தெரியாத காட்டில் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

1975ல் முதன் முதலாக சிலக்கம்மா செப்பிண்டி என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான ரகுநாத ரெட்டி , இயக்குனர் பாலச்சந்தரின் அறிமுகம் கிடைக்கப்பெற்று முதன் முதலாக அவரின் அரங்கேற்றம் படத்தில் பணிபுரிந்தார்.

தொடர்ந்து கவிதாலயா தயாரிப்பில் வந்த படங்களிலும் அனைத்து பாலச்சந்தர் இயக்கிய படங்களிலும் பணியாற்றினார்.

பாலச்சந்தரின் சிஷ்யர் அமீர்ஜான் இயக்கிய பூவிலங்கு, சிவா உள்ளிட்ட படங்களிலும் ரகுநாதரெட்டி பணியாற்றியுள்ளார்.

இவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்த படம் சிந்து பைரவி. அதில் முதல் காட்சியில் வரும் பாறை அதில் மோதும் அலைகள் என விசாகப்பட்டினம் கடற்கரையில் நடந்த படப்பிடிப்பில் சிவக்குமாரை வைத்து முதல் பாடல் ஒளிப்பதிவு செய்ய இவர் மிகவும் சிரமப்பட்டதாக சொல்வதுண்டு.

புன்னகை மன்னன் படத்தில் வரும் முதல் காட்சியில் ஆர்ப்பரித்து வரும் சாலக்குடி அருவியை அழகாக காட்டியிருப்பார். தொடர்ந்து கமல், ரேகா வரும் தற்கொலை காட்சிகளையும் மிக அச்சத்துடன் நாம் பார்க்கும்படி பிரமாண்டமாக காட்டி இருப்பார் இயக்குனர். அந்த காட்சிகளுக்கு காரணம் ஒளிப்பதிவாளர் ரகுநாதரெட்டியின் கேமராதான்.

பாலச்சந்தரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக அவரின் சிந்து பைரவி, புதுப்புது அர்த்தங்கள், டூயட், அழகன், ஜாதிமல்லி, வானமே எல்லை, கல்கி என பாலச்சந்தரின் அனைத்து படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர் இவர்.

இவரை பற்றி பெரும்பாலோர் அறிந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. மீடியாக்களிலும், செய்திகளிலும் அதிகம் செய்திகளில் வராத ஒளிப்பதிவாளர் இவர்.

பாலசந்தர் மட்டுமின்றி தமிழில் வந்த பெரும்பாலான 80ஸ், 90ஸ் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ராஜ்கபூர் இயக்கத்தில் வந்த சின்னப்பசங்க நாங்க, கதிர் இயக்கத்தில் வந்த உழவன், சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வந்த சின்ன வாத்தியார், பி. வாசு இயக்கத்தில் வந்த காக்கை சிறகினிலே, மணிவாசகம் இயக்கத்தில் வந்த ஜல்லிக்கட்டுக்காளை. டி.பி கஜேந்திரன் இயக்கத்தில் வந்த மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இரண்டாம் சாணக்யன், கோகுலத்தில் சீதை உள்ளிட்ட சீரியல்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர்.

தமிழில் பல சாதனை படங்கள் இவர் ஒளிப்பதிவு செய்திருந்தாலும். அதிக பட்சம் இவர் பாலச்சந்தர் படங்களிலேயே அவரின் கவிதாலாயா நிறுவனத்திலேயே அதிகம் ஒளிப்பதிவு செய்ததால் இவரைப்பற்றிய புகழ் வெளிச்சம் மீடியாக்களில் அதிகம் வரவில்லை என சொல்லலாம்.

 

Related Articles

Next Story