மணிரத்னம் சொல்லும் முன்பே ரகுமான் இசையமைத்த பாடல்!.. ரோஜா படத்தில் நடந்த மேஜிக்!…
தமிழ் சினிமாவில் ஃபிரெஷ்ஷாக, புதுசாக படம் எடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த மௌன ராகம், நாயகன், ரோஜா, பம்பாய், தளபதி, இருவர் உள்ளிட்ட படங்கள் எப்போதும் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களின் வரிசையில் நிச்சயம் இருக்கும்.
துவக்கத்தில் மணிரத்தினத்தின் அனைத்து படங்களுக்கும் இளையராஜாவே இசையமைத்து வந்தார். ஒரு கட்டத்தில் ஒரு மாற்றம் வேண்டும் என விரும்பிய மணிரத்னம் ஏ.ஆர்.ரகுமானை தான் இயக்கிய ரோஜா படத்தில் அறிமுகம் செய்தார். 1992ம் வருடம் இப்படம் வெளியானது. அப்போது ரகுமானுக்கு 19 வயதுதான் ஆகியிருந்தது.
அந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. இசை ரசிகர்கள் ஒரு புதிய இசையின் வீச்சை உணர்ந்தார்கள். இந்த படம் பற்றி பேசிய மணிரத்னம் ‘ரகுமானிடம் ரோஜா படத்தின் கதையை மட்டுமே சொன்னேன்.
அவரிடம் பாடலுக்கான சூழ்நிலைகளை சொல்வதற்கு முன்பே ஒரு பாட்டுக்கான டியூனை கிட்டத்தட்ட தயார் செய்து விட்டார். ரோஜா திருமணமாகி வீட்டை பிரிந்து செல்லும் சூழ்நிலையில் அவர் போட்டிருந்த அந்த பாடல்தான் ‘சின்ன சின்ன ஆசை’ பாடல். அந்த காட்சியை நான் யோசிக்கவே இல்லை. அதன்பின் கதாநாயகியின் அறிமுக பாடலாக அந்த பாடலை வைத்தேன்’ என பேசியுள்ளார்.
சின்ன சின்ன ஆசை பாட்டுக்கு ரகுமான் தேசிய விருதை பெற்றார். அந்த பாடல் மட்டுமில்லாமல் காதல் ரோஜாவே பாடல் காதலின் வலியை உணர்த்தியது. அதேபோல், புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது பாடலும் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.