இயக்குனர் விக்ரமனிடம் சூரிய வம்சம் உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தவர் ராஜகுமாரன். தேவயானியை வைத்து ‘நீ வருவாய் என’ என்கிற திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின் சரத்குமார், விக்ரம் மற்றும் தேவயானி ஆகியோரை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்கிற திரைப்படத்தையும் இயக்கினார்.
மேலும், முரளி, தேவையானியை வைத்து ‘காதலுடன்’ என்கிற திரைப்படத்தை இயக்கினார். கடைசியாக தேவயானிக்கு ஜோடியாக அவரே ஹீரோவாக நடித்து ‘திருமதி தமிழ்’ என்கிற படத்தையும் இயக்கினார். அந்த படம் ஓடவில்லை. கடந்த 12 வருடங்களாக ராஜகுமாரன் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. அதேநேரம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கடுகு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
தேவயானியின் கணவர் என்கிற அடையாளத்தோடு வலம் வரும் ராஜகுமாரன் ஊடகங்களில் தொடர்ந்து பலரை பற்றியும் சர்ச்சையான கருத்துக்களை கூறி வருகிறார். சீயான் விக்ரம், கமல்ஹாசன் எல்லாம் சிறந்த நடிகர்களே இல்லை.. விஜய்க்கு நடிக்கவே தெரியாது.. மகேந்திரன் சிறந்த இயக்குனர் இல்லை என்றெல்லாம் பேட்டி கொடுத்து ட்ரோலில் சிக்கினார்.

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த ராஜகுமாரன் ‘கமல் சார் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி கமல் சார் உங்க வீட்டுக்கு மதியம் சாப்பிட வராங்கன்னு சொன்னாங்க. ஆனா நான் ‘ நாங்க சென்னை கிளம்பிட்டோம்.. வீட்டு சாவி தருகிறோம்.. அவர வந்து சாப்பிட்டு போக சொல்லுங்கன்னு சொன்னேன்.. உங்கள சந்திக்கதான் அவர் வரார்ன்னு சொன்னாங்க..
அதுக்கு நான் ‘30 வருஷமா நாங்க சென்னையிலதான் இருக்கோம்.. அப்பலாம் எங்களை சந்திக்காத கமல் அரசியல் நிமித்தமாக சந்திக்க வருவது எனக்கு பிடிக்கவில்லை’ என்று சொல்லிட்டேன் என்று சொல்லி இருக்கிறார். கமல் நடித்த தெனாலி மற்றும் பஞ்சதந்திரம் ஆகிய இரண்டு படங்களிலும் அவருடன் தேவயானி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
