எனக்கு பதில் அவர் ஹீரோவா?!.. பாலச்சந்தர் மீது கோபப்பட்டு ராஜேஷ் எடுத்த விபரீத முடிவு!…
தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க துவங்கி பல படங்களில் நடித்துவிட்டு பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கியவர் நடிகர் ராஜேஷ். இப்போதும் தொடர்ந்து அவர் நடித்து வருகிறார். சென்னையில் சில பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்தவர் இவர். இவர் முதன் முதலில் ஹீரோவாக நடித்த திரைப்படம் கன்னி பருவத்திலே. இந்த திரைப்படத்தில் வடிவுக்கரசியின் கணவராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
அதன்பின் பல படங்களில் ராஜேஷ் நடித்தார். ஒருகட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார். சினிமாவில் வாய்ப்புகள் குறைய துவங்கியதும் தொலைக்காட்சி சீரியல் பக்கம் சென்றார். இதுவரை 15 சிரீயல்களில் நடித்துள்ளார். தற்போதும் சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து சினிமாவில் இருந்து வரும் நடிகர்களில் ராஜேஷ் முக்கியமானவர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘நான் அறிமுகமாகவிருந்த திரைப்படம் பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை. ஆனால், என்னை தூக்கிவிட்டு கமல்ஹாசனை பாலச்சந்தர் நடிக்க வைத்தார். இதனால் கோபப்பட்ட நான் நாமும் பாலச்சந்தரை போல இயக்குனராக வேண்டும் என நினைத்து கதைகளை எழுத துவங்கி படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். 5 வருடங்கள் முயற்சி செய்த பின்னரே அது அவ்வளவு சுலபம் இல்லை என்பதும் எவ்வளவு முட்டாள்தனமாக நான் யோசித்திருக்கிறேன் என்பது எனக்கு புரிந்தது’ என கூறியுள்ளார்.
அவள் ஒரு தொடர்கதை திரைப்படம் 1974ம் ஆண்டு வெளியானது. அப்படம் வெளியாகி 5 வருடம் கழித்து 1979ம் வருடம் கன்னி பருவத்திலே படத்தில் ராஜேஷ் அறிமுகமானார். அதேபோல் பாலச்சந்தர் இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளியான ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் ராஜேஷ் கதாநாயகனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.