“என்னைய செருப்பால கூட அடிங்க.. ஆனால்?”.. சின்னப்ப தேவரின் காலில் விழுந்து கதறிய டாப் பாலிவுட் ஹீரோ..

by Arun Prasad |
“என்னைய செருப்பால கூட அடிங்க.. ஆனால்?”.. சின்னப்ப தேவரின் காலில் விழுந்து கதறிய டாப் பாலிவுட் ஹீரோ..
X

தேவர் என்று அழைக்கப்படுகிற சாண்டோ சின்னப்ப தேவர் 1950, 60 களில் பல வெற்றித் திரைப்படங்களை தனது தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். குறிப்பாக எம்ஜிஆரை வைத்து 16 வெற்றித்திரைப்படங்களை அவரது தேவர் பிலிம்ஸ் பேன்னரின் மூலம் தயாரித்துள்ளார்.

ஆன்மீகத்தில் மிகவும் நாட்டம் கொண்ட சின்னப்ப தேவர், சிங்கம், புலி போன்ற விலங்குகளையும் வளர்த்து வந்தார். அவர் சிங்கத்தின் மேல் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று மிகவும் புகழ்பெற்றது. மேல் சட்டையே அணியாமல் வெறும் வேஷ்டி மட்டுமே அணிந்து உடல் முழுவதும் திருநீரை பூசிக்கொண்டு திரிவது தேவரின் பாணி. எந்த சொல் பேசினாலும் “முருகா” என்ற வார்த்தையை இணைத்துக்கொள்வார். அந்த அளவுக்கு முருக பக்தி உடையவர்.

தமிழின் மிகப் பிரபலமான தயாரிப்பாளராக திகழ்ந்த தேவருக்கு திடீரென ஹிந்தியில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என தோன்றியது. தனது தம்பியும் இயக்குனருமான எம் ஏ திருமுகத்திடம் ஆலோசித்தார் தேவர். ஆனால் திருமுகம் இந்த யோசனை சரியாக வராது, ஏவிஎம்மால் தான் ஹிந்தி படங்களை தயாரிக்க முடியும் என கூறியுள்ளார்.

ஆனால் ஹிந்தி திரைப்படம் தயாரிப்பதை தனது கௌரவமாக நினைத்த சின்னப்ப தேவர் இதனை சாத்தியமாக்க முடிவு செய்தார். 1967 ஆம் ஆண்டு சின்னப்ப தேவர் தயாரிப்பில் மேஜர் சுந்தரராஜன், முத்துராமன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த “தெய்வச் செயல்” என்ற திரைப்படத்தை ஹிந்தியில் எடுக்க முடிவு செய்தார் தேவர்.

அதன் படி ஹிந்தியில் அப்போது டாப் ஹீரோவாக இருந்த ராஜேஷ் கன்னாவை அணுகினார் தேவர். உள்ளே நுழைந்தவுடனேயே திரைப்படத்தின் கதையை சொல்லிவிட்டு ராஜேஷ் கன்னாவிடம் ஒரு பெருந்தொகையை செக்கில் எழுதி நீட்டினார். அப்பெருந்தொகைக்கு ராஜேஷ் கன்னாவும் மயங்கிப்போனார்.

தேவரின் தம்பியான எம் ஏ திருமுகம் அத்திரைப்படத்தை இயக்குவதாக முடிவு செய்யப்பட்டது. அத்திரைப்படத்திற்கு “ஹாத்தி மேரே சாத்தி” என டைட்டிலும் வைக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ராஜேஷ் கன்னாவுடன் தனுஜா ஜோடியாக நடித்தார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு ராஜேஷ் கன்னா தொடர்ந்து தாமதமாகவே வந்துகொண்டிருந்திருந்திருக்கிறார். இதனை கவனித்துக்கொண்டிருந்த தேவர் ஒரு நாள் அனைவரின் முன்னிலும் தமிழில் சில கெட்ட வார்த்தைகள் போட்டு அவரை திட்டிவிட்டார்.

ராஜேஷ் கன்னாவுக்கு தமிழ் தெரியாது. ஆனால் தேவர் தன்னை திட்டுகிறார் என்பதை அறிந்துகொண்டார். உடனே தேவரை தனியறைக்கு அழைத்துச்சென்ற ராஜேஷ் கன்னா, திடீரென அவரது காலை தொட்டுக் கும்பிட்டார்.

அதன் பின் தனது செருப்பை கழட்டி தேவரின் கையில் கொடுத்து “என்னை இந்த செருப்பால் கூட அடியுங்கள். ஆனால் அனைவரின் முன்னாலும் என்னை திட்டாதீர்கள். நான் பாலிவுட்டில் ஒரு சூப்பர் ஸ்டாராக கௌரவமான நிலையில் இருக்கிறேன்” என கண் கலங்கியுள்ளார்.

தன்னால் ராஜேஷ் கன்னா அவமானப்பட்டுவிட்டார் என்பதை உணர்ந்த தேவரும் கண்கலங்கி, “இனிமே உன்னை திட்டமாட்டேன்” என கூறியுள்ளார். அதன் பின் ராஜேஷ் கன்னா நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வரத்தொடங்கினாராம்.

“ஹாத்தி மேரே சாத்தி” திரைப்படம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்து ஹிந்தி திரையுலகில் வரலாறு காணாத வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story