Rajinikanth: முன்பெல்லாம் ரஜினி ஒரு படம் முடித்தவுடன் பல மாதங்கள் வரை இடைவெளி விடுவார். மிகவும் பொறுமையாக ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடிக்கப்போவார். ஆனால், ஜெயிலர் பட ஹிட்டுக்கு பின் ஜெட் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படம் 700 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதன்பின் லால் சலாமில் கெஸ்ட் ரோல், ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேலின் இயக்கத்தில் வேட்டையன் என நடிக்க துவங்கினார். வேட்டையன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. உடனே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க துவங்கினார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மற்றொரு படத்தில் நடித்து கொடுக்கிறேன் என ரஜினி சொன்னதால்தான் ஜெயிலர் படம் உருவானது. இந்த காம்பினேஷன் சூப்பர் ஹிட் என்பதால் கூலி படத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தோடு இணைந்திருக்கிறார் ரஜினி.
வழக்கமாக லோகேஷ் கனகராஜ் படங்களில் பல நடிகர்களும் நடிப்பது போல கூலி படத்திலும் சத்தியராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சந்தீப் கிஷன், ஸ்ருதிஹாசன் என பலரும் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இது தொடர்பான புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டது.
இந்த படத்தை முடித்த கையோடு ரஜினி நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கப்போய்விட்டார். இந்த படத்தின் படப்பிடிபு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திலும் சிவ்ராஜ்குமார் உள்ளிட்ட சிலர் கேமியோ வேடத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில்தான் ஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரஜினியை வைத்து பேட்ட படத்தை எடுத்த கார்த்திக் சுப்பாராஜ். ஜெயிலர் 2 இயக்குனர் நெல்சன், கூலி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என எல்லோருடன் ரஜினி ஜாலியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இது. இந்த புகைப்படம் ரஜினி ரசிகர்களால் சமூகவலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.