திவாலாகிய லைக்கா நிறுவனம் - பரிதாப நிலையில் லால்சலாம், இந்தியன் 2 படப்பிடிப்புகள்!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக இயங்கி வருகிறது லைக்கா நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஒரு பெரிய நிறுவனமாக செயல்பட்டு வரும் லைக்கா நிறுவனத்தின் மூலம் விஜய் ,அஜித் ,கமல் ,ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
லைக்கா நிறுவனம் முதன் முதலில் விஜய் நடித்த கத்தி திரைப்படத்தை தான் தயாரித்து வெளியிட்டன. அது மட்டும் இல்லாமல் உலகளாவிய விநியோக உரிமையையும் லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் தியேட்டரிக்கல் உரிமையை எப்படி ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றுகிறதோ அதே போல பெரும்பாலான படங்களின் வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் லைக்கா நிறுவனத்தின் மூலம் அஜித்தின் விடாமுயற்சி, ரஜினி நடிக்கும் லால் சலாம் திரைப்படம் மற்றும் கமலின் நடிப்பில் தயாராகி வரும் இந்தியன் 2 ,லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் சந்திரமுகி 2 போன்ற முக்கியமான படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு லைக்கா நிறுவனத்தில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். நான்கு நாட்கள் தொடர்ந்து நடத்திய சோதனையில் பல ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதனால் லைக்கா நிறுவனம் பெரும் அப்செட்டில் இருப்பதாகவும் பொருளாதார ரீதியிலும் டவுன் ஆகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக லால் சலாம், இந்தியன் 2, விடாமுயற்சி போன்ற படங்களின் தயாரிப்பில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு நேரத்தில் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் தேவைப்படும் நேரத்தில் லைக்கா நிறுவனத்தால் தொகையை கொடுக்க முடியாததால் அந்த செலவுகளை எல்லாம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்று படப்பிடிப்பை நடத்தி வருவதாக கூறுகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் மிகப் பெரும் பொருள் செலவில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பிலும் லைக்கா நிறுவனத்தால் இப்போதைக்கு உதவி செய்ய முடியாததால் அந்தப் படப்பிடிப்பிற்கு சிறிது நாட்கள் பிரேக் விட்டுள்ளதாகவும் கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.