கவிஞருக்காக வாய்ப்பு கேட்ட ரஜினி!.. இளையராஜாவிடம் முடியுமா? என்ன செய்தார் தெரியுமா?
80களில் தமிழ் சினிமாவில் தன்னுடைய இசையால் ஓடாத படங்களை கூட ஓட வைத்தவர் இசைஞானி இளையராஜா. அவரின் கான இசையால் அனைவரையும் இன்றுவரை தன் வசப்படுத்திக் கொண்டிருக்கிறார். 80 காலகட்டத்தில் இவருடைய இசைக்காக எத்தனையோ இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தவம் கிடந்த நேரங்கள் ஏராளம்.
ரஜினி, கமல் ,பிரபு, சத்யராஜ் என அனைத்து நடிகர்களுக்கும் தன்னுடைய இசையை விருந்தாக படைத்திருக்கிறார் இளையராஜா. ஏன் ஒரு மேடையில் கூட ரஜினி இளையராஜாவைப் பார்த்து "என் படத்தை விட கமலின் படத்திற்கு தான் நல்ல இசையை போட்டுக் கொடுத்திருக்கிறீர்கள்" என மிகவும் கிண்டலாக சொல்லி இருக்கிறார்.
இந்த நிலையில் ரஜினிக்கும் இளையராஜாவுக்கும் இடையே நடந்த ஒரு சம்பவத்தை பற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது ரஜினி நடித்த ‘ராஜாதிராஜா’ படத்தில் அமைந்த மீனம்மா மீனம்மா என்ற பாடலை கேட்டதும் ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாம்.
உடனே இந்த பாடலை யார் எழுதியது என கேட்க அருகில் இருந்த கவிஞர் பிறைசூடனை அறிமுகப்படுத்தி இவர் தான் எழுதியது என்று கூறியிருக்கின்றனர். உடனே பிறைசூடனை சுட்டிக்காட்டி இளையராஜாவிடம் ‘இவர் நல்லா எழுதிகிறார், வருங்காலத்தில் இவருக்கு வாய்ப்புக் கொடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினாராம்.
ஆனால் எந்த நேரத்தில் சொன்னாரோ அதன் பிறகு பிறைசூடனுக்கு வாய்ப்பே வரவில்லையாம், இளையராஜாவும் எந்த வாய்ப்பும் கொடுக்க வில்லையாம். பொதுவாக இளையராஜாவிடம் யாராவது வாய்ப்பை பற்றி பேசினாலே அவருக்கு பிடிக்காதாம், அவருக்கு விருப்பம் என்றால் மட்டுமே வாய்ப்பு கொடுப்பாராம். அதனாலேயே இவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்திருப்பார் என்று சொல்லப்படுகிறது.