வளர்த்து விட்டவருக்கு ரஜினி காட்டிய நன்றிக் கடன்!.. ஆனால் நடந்ததோ வேறு..
தமிழ் சினிமாவில் 80களில் இருந்து தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலை நிறுத்தி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அன்றும் சரி இன்றும் சரி அதே ஸ்டைலோடும் அதே தன்னம்பிக்கையோடும் மக்களை ரசிக்க வைத்துக் கொண்டு வருகிறார். இன்றைய தலைமுறையினருக்கே டஃப் கொடுக்கும் நடிகராகவும் இருந்து வருகிறார்.
விஜய் , அஜித் படங்களை காட்டிலும் ரஜினி படங்களின் வசூல் இன்றளவும் உச்சம் தொட்டு வருகிறது. என்றும் மாறா இளமையுடனும் ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார். இவரை திரையில் முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரையே சேரும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
சாதாரண மனிதராக இருந்த ரஜினியை இன்று உலகமே கொண்டாடும் வகையில் மாற்றிய பெருமை அவரையே சேரும். இப்படிப் பட்ட பாலசந்தரை எந்த ஒரு தருணத்திலும் ரஜினி மறந்ததே இல்லை. ஒரு சமயம் ‘ நெற்றிக்கண்’ படத்திற்காக அவரிடம் கால்ஷீட் வாங்க கவிதாலயாவில் முக்கிய பொறுப்பில் இருந்த பிரமிடு நடராஜன் சென்றிருந்தார்.
நெற்றிக்கண் படத்தை பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தான் தயாரித்து வெளியிட்டது. ரஜினியை பார்க்க பிரமிடு நடராஜன் செல்ல அதுவரை ரஜினி ஒரு வளரும் நடிகர் என்ற அந்தஸ்தில் தான் இருந்தாராம். அதனால் ஏவிஎம் நிறுவனத்திடம் ரஜினி அப்போது என்ன சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதையெல்லாம் அறிந்து தான் பிரமிடு நடராஜன் ரஜினியை பார்க்க சென்றிருக்கிறார்.
படத்தை பற்றி எல்லாம் பேசி முடித்ததும் பிரமிடு நடராஜன் அட்வான்ஸ் தொகையாக சிறு தொகையை எடுத்து கையில் நீட்ட அதை பார்த்ததும் ரஜினி உடனே எழுந்து ‘ஐய்யயோ அதெல்லாம் வேணாம், பாலசந்தர் படத்திற்கு நான் அட்வான்ஸ் வாங்கனுமா? அதெல்லாம் வேணாம்.’ என்று சொன்னாராம்.
உடனே பிரமிடு நடராஜன் ‘பாருங்க ரஜினி, உங்க சம்பளம் என்ன என்பதை ஏவிஎம் நிறுவனத்திடம் பேசி தான் வந்திருக்கிறேன், அதுவும் போக நீங்க இதை வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இந்த ப்ராஜக்டையே விட்டு விடுவோம். மேலும் நீங்கள் மற்றும் எஸ்.பி,முத்துராமன் இணையும் இந்த கூட்டணியை நாங்கள் தொடர மாட்டோம்’ என்று கூறினாராம்.
இதையும் படிங்க : இத்தனை நடிகர்களுக்கு குரல் கொடுத்தது மயில்சாமியா?!.. நம்பவே முடியலயே!…
அதனால் ரஜினி இவர் விட மாட்டார் போல என நினைத்து அதன் பிறகே அட்வான்ஸ் தொகையை பெற்றுக் கொண்டாராம். நெற்றிக்கண் படத்தை எஸ்.பி,முத்துராமன் தான் இயக்கியிருந்தார். இந்த சுவாரஸ்ய தகவலை பிரமிடு நடராஜன் ஒரு பேட்டியில் கூறினார்.