நான் கனவில் கூட நினைக்கவில்லை!... நடிகர் ரஜினி டிவிட்டரில் உருக்கம்...
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் வருகிற தீபாவளி அதாவது நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.
இப்படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், குஷ்பு, நயன்தாரா, மீனா, சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம் பெற்ற ரஜினியின் அறிமுகப்பாடல் ‘அண்ணாத்த அண்ணாத்த’ வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பாடலை ரஜினியின் பல அறிமுகப்பாடலை பாடிய மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இப்பாடல் மிகவும் துள்ளலாக உருவாகியுள்ளது.
இந்நிலையில், இந்த பாடல் பற்றி தனது டிவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினி ‘45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் 'அண்ணாத்தே' படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.