அண்ணாத்த படத்தை பார்த்த பின் என் பேரன்... ஆடியோ வெளியிட்ட ரஜினி...

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் ஹீரோவாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும்,குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் ரஜினி கிராமத்து ஆளாக நடித்து பட்டைய கிளப்பியுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் திரைப்படம் போல் இப்படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் கிராமத்து ஊர் தலைவராக ரஜினி நடித்துள்ளார். தங்கை கீர்த்தி சுரேஷ் உடனான செண்டிமெண்ட் மற்றும் காமெடி காட்சிகளும், வில்லன்களுக்கு ரஜினி சவால் விடும் காட்சிகளும் இந்த டிரெய்லர் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில் அண்ணாத்த படத்தை எனது பேரன்கள் 3 பேருடன் நேற்று மாலை பார்த்தேன். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுகொண்டிருக்கும் போதிலிருந்தே என் பேரன் வேத் எப்ப தாத்தா படத்த காட்டுவீங்க என நச்சரித்துகொண்டே இருந்தான். என் அருகில் அமர்ந்து படம் பார்த்த அவனுக்கு இப்படம் மிகவும் பிடித்துவிட்டது. படம் முடிந்த 5 நிமிடங்கள் என்னை விடவே இல்லை. தாத்தா படம் சூப்பர்.. தேங்க்யூ என சொல்லிக்கொண்டே இருந்தான்’ என அதில் ரஜினி பேசியுள்ளார்.
அந்த ஆடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.